டெல்லியைச் சேர்ந்த ஒரு பிளிங்கிட் வாடிக்கையாளர், இன்று தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்க வேண்டும் என முடிவு செய்து, கடைக்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று இணையத்தில் டிரெண்டிங் ஆன குவிக் காமர்ஸ் வாயிலாக தங்கம் வாங்கும் முறையை பயன்படுத்தி ஒரு கிராம் தங்கம் வாங்கியுள்ளார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா..?
டெல்லியை சேர்ந்த மோஹித் ஜெயின் பிளிங்கிட் தளத்தில் இன்று தங்கம் வாங்கிய சோக கதையை டிவிட்டரில் பகிர்ந்து பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளார்.

மோஹித் ஜெயின் மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸில் இருந்து 1 கிராம் தங்க நாணயத்தை பிளிங்கிட் மூலம் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவர் பெற்றதோ 0.5 கிராம் தங்க நாணயம் தான்.
மோஹித் ஜெயின் பிளிங்கிட்டின் வாடிக்கையாளர் சேவையுடன் பேசியதையும் ஸ்கிரீன்ஷாட் உடன் பகிர்ந்துள்ளார். அதில், புகார் அளிக்கும் நேரம் ஏற்கனவே மூடிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. AI சாட்பாட் உடனான பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை என புலம்பியுள்ளார்.

மோஹித் ஜெயின், மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸில் இருந்து 1 கிராம் தங்க நாணயம் மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயம் ஆகிய இரண்டையும் ஆர்டர் செய்திருந்தார். 1 கிராம் தங்க நாணயத்தின் விலை ரூ.8,249 ஆகவும், 0.5 கிராம் நாணயத்தின் விலை ரூ.4,125 ஆகவும் இருந்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட தங்க நாணயம், வெள்ளி நாணயம் வீட்டில் டெலிவரி செய்யப்பட்ட போது அவர் வீட்டில் இல்லை என்றும், வீட்டில் தனது சகோதரரிடம் கொடுக்கப்பட்டதாகவும். டெலிலரி செய்யப்பட்ட தங்க நாணயம் 0.5 கிராம் மட்டுமே இருந்தது அவருடைய சகோதரர் கவனிக்காத நிலையில் நேரம் கடந்து புகார் அளிக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் ரூ.4,124 இழப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் டெலிவரி ஏஜெண்டை தொடர்பு கொண்டதாகவும், டெலிவரியின் புகைப்படங்கள் இருந்தபோதிலும், அவரும் உதவி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மோஹித் ஜெயினின் அனுபவம், குறிப்பாக அதிக மதிப்புள்ள ஆர்டர்களுக்கு வலுவான வாடிக்கையாளர் சேவை அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆன்லைனில் தங்கம் வாங்குவதை தாண்டி தற்போது குவிக் காமர்ஸ் தளத்தில் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ள வேளையில் இத்தகைய பிரச்சனை பெரிய விஷயமாக வெடித்துள்ளது.

இதேவேளையில் அவர் டிவிட்டரில் பதிவிட்ட 4 மணிநேரத்தில் பிளிங்கிட் தளத்தில் இருந்து அழைப்பு வந்து பிரச்சனை தீர்க்கப்பட்டதாகவும் அடுத்த பதிவில் தெரிவித்துள்ளார். இதற்காக தான் ஈமெயில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications