டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான டாடா குழுமம் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அறிந்த ஒரு நிறுவனம்.
மும்பையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1868ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் டாடா மிகப்பெரியது என்றால் அது மிகையல்ல. அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்து போன ஒரு நிறுவனம்.
சொல்லப்போனால் 2017 - 2018ன் படி இந்த குழுமம் 11,070 கோடி டாலர் வருவாயை கண்டுள்ளது. அந்தளவு வருவாயைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இப்படி ஒரு பேர் போன குழுமத்தின் மீது பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவர் நுஸ்லி வாடியா வழக்கு தொடர்ந்திருந்தார். ஏன் எதற்காக இந்த வழக்கு? தற்போது ஏன் அதை திரும்ப பெற்றுக் கொண்டார்.
டாடா குழுமம் மீதான வழக்கு வாபஸ்
பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவர் நுஸ்லி வாடியா தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் பல நிர்வாகிகள் மீது தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் சில அதிகாரிகள் மீதும் இந்த வழக்குகள் தொடரப்பட்டது. மேலும் 3,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கும் இதில் அடங்கும்.
அவதூறு வழக்கு
கடந்த 2016ம் ஆண்டு டாடா குழும நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலிருந்தும் தலைவர் பதவியிலிருந்தும் சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டவுடன், தன் மீது ரத்தன் டாடா உள்ளிட்ட இயக்குனர்கள் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் நுஸ்லி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தன் மீது அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக நுஸ்லி வாடியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏன் வாக்களிப்பு?
மேலும் 2016ம் ஆண்டில் டாடா குழும நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலிருந்து சைரஸ் மிஸ்திரியை வெளியேற்றுவதற்காக வாக்களித்தது தொடர்பாக, இக்குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் பல இயக்குனர்கள் மீதும் நுஸ்லி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சரியான முன்னுதாரணம் அல்ல
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்கள், இப்படி ஒருவர் மீது ஒருவர் தாங்கள் மாறி மாறி குற்றம் சாட்டி கொள்வது, சரியான ஒரு முன்னுதாரணமாக இருக்காது. ஆக நீங்கள் இருவரும் நீதிமன்றத்துக்கு வெளியே இப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதுவும் ஒரு காரணம்
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட இயக்குனர் குழுவில் இருந்தும் நுஸ்லி வாடியா நீக்கப்பட்டார். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது நிர்வாகத் தலைவரான சைரஸ் மிஸ்திரி பதவியில் நீடிப்பதற்காக ஆதரவளித்த பின்னரே அக்டோபர் 2016ல் வாடியா நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவும் நுஸ்லி வாடியா நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications