மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவில் இயங்கும் அனைத்து ஈகாமர்ஸ் தளங்களுக்கும், போர்ன்விட்டா உட்பட அனைத்து பானங்களையும் "ஹெல்த் டிரிங்க்" (Health Drink) என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஹெல்த் டிரிங்க் என்ற பெயரில் விற்கப்படும் பல தயாரிப்புகள் உண்மையாக ஆரோக்கியமானது இல்லை என பல வருடங்களாக மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சகம் ஈகாமர்ஸ் தளங்களுக்கு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights - NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க் அல்ல" என்று கண்டறியப்பட்டது என்று மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஈகாமர்ஸ் தளங்கள் தங்கள் இணையத்தில் "ஹெல்த் டிரிங்க்ஸ்" பிரிவில் இருந்து போர்ன்விட்டா உட்பட பானங்களை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன என்று ஏப்ரல் 10 ஆம் தேதியிட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும், பால் சார்ந்த, தானிய வகைகள் சார்ந்த அல்லது மால்ட் சார்ந்த பானங்களை 'ஹெல்த் டிரிங்க்' (Health Drink) அல்லது 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என லேபிள் ஒட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
ஏனென்றால், இந்திய உணவு சட்டங்களில் 'ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. மேலும் இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் அல்லாத, சுவை கூட்டப்பட்ட தண்ணீர் சார்ந்த பானங்களைக் குறிக்கிறது.
தவறான சொற்களைப் பயன்படுத்துவது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்று FSSAI ஈகாமர்ஸ் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, அனைத்து ஈகாமர்ஸ் உணவு வணிக தொழில்முனைவோர்கள் (FBOs) ஹெல்த் டிரிங்க்ஸ்/எனர்ஜி டிரிங்க்ஸ்' (Health Drinks/Energy Drinks) பிரிவுகளில் இருந்து இதுபோன்ற பானங்களை நீக்கி இதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.


Click it and Unblock the Notifications