உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது, ஒருபக்கம் டிரம்ப் அறிவிக்கக் காத்திருக்கும் ரெசிப்ரோக்கல் வரி, மறுமுனையில் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பும் உலக நாடுகள் பதிலடி கொடுக்க தயாராக இருப்பது என ஒட்டுமொத்த வர்த்தக சந்தையும் தலைகீழாக மாறும் நிலை உருவாகி வருகிறது.
இதேபோல் அமெரிக்க டாலரின் நீண்டகால ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்துடன் வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச வணிகத்தில் டாலர் அல்லாத தங்களுக்கென சொந்த நாணயத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் வர்த்தகம் செய்யத் தயாராகும் ஐடியாவை தீவிரமாக யோசனை செய்து வருகிறது. இதை டிரம்ப்-ம் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

கிரிப்டோகரன்சி சந்தையிலும் டாலரின் ஆதிக்கம் இருக்கும் வகையில், டாலருடன் இணைக்கப்பட்ட நிலையான நாணயங்கள் என கூறப்படும் stablecoin இருக்கும் வேளையில், இதே முறையில் தங்கத்தை கிரிப்டோ சந்தையுடன் இணைக்கும் ஒரு முயற்சியை கிரிப்டோகரன்சி துறையில் முக்கிய நபராகவும், புக்கேல் நிர்வாகத்தின் ஆலோசகராகவும் இருக்கும் மேக்ஸ் கீசர் முன்வைக்கிறார்.
எதிர்காலத்தில் நாணய பரிமாற்றத்தில் கிரிப்டோகரன்சி முக்கிய பங்கு வகிக்கப்போவது என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, இதனாலேயே டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டு அரசு கருவூலத்தில் கிரிப்டோகரன்சி இருப்பை சேர்க்க முடிவு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் டாலருடன் இணைக்கப்பட்ட நிலையான நாணயங்கள் (stablecoin) உலக சந்தைகளில் ஆதிக்கம் பெருகும்போது, தங்கத்தை மையமாகக் கொண்ட டிஜிட்டல் கரன்சி கொண்டு டாலர் ஆதிக்கத்தை எதிர்க்கப்படலாம், இதில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்காற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக பிரிக்ஸ் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவை இணைந்து டாலர் அடிப்படையிலான ஸ்டேபிள்காயினுக்கு எதிராக தங்கம் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தைக் குறைக்க விரும்பும் நாடுகளும், பணவீக்க அழுத்தங்களில் இருந்து தப்பிக்க விரும்பும் நாடுகளும் தங்கத்தை மையமாகக் கொண்ட இந்த மாற்றுக் கட்டமைப்பை அதிகமாக ஆதரிக்கும் என்று மேக்ஸ் கீசர் கூறுகிறார்.
தங்கம் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின் உருவாக்கப்பட்டால் வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதைத் தாண்டி சாதாரண காகித நாணயங்களால் (fiat currencies) ஏற்ற இறக்கங்கள் மற்றும் மதிப்பு குறைதல் ஆகியவற்றிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோல்டு கிரிப்டோகரன்சி இந்தியா மற்றும் அரபு நாடுகளில் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின் ஐடியா புதிதாக உருவானது இல்லை, 2023 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் டாலருக்கு மாற்று நாணயத்தைக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோல்டு கிரிப்டோகரன்சி குறித்து பொருளாதார நிபுணர் ஜிம் ரிக்கார்ட்ஸ் கூறுகையில், இத்தகைய நாணயம் அறிமுகப்படுத்துவது டாலரின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணவீக்கம் மற்றும் மதிப்பு குறைதல் டாலரின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் இந்த யோசனையை வெறும் ஆய்வு, பேச்சுவார்த்தை கட்டத்திலேயே வைத்திருந்தது, ஆனால் இதை செயல்முறைப்படுத்த எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தான் டிரம்ப் சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகளை மிரட்டினார். பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான வர்த்தகத்திற்கு டாலருக்கு எதிராக மாற்று நாணயத்தை அறிமுகப்படுத்தினால், கடுமையான வரிகளை விதிப்போம் என்று டிரம்ப் எச்சரித்தார்.


Click it and Unblock the Notifications