மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் BSNL தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை (VRS) கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இத்தகவல் BSNL ஊழியர்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற, மத்திய தகவல் தொடர்புத் துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை கோரியுள்ளதாக டைம்ஸ்நவ் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டாவது வி.ஆர்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பிஎஸ்என்எல் 1500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளது. இந்த VRS சுற்றின் மூலம் சுமார் 18,000 முதல் 19,000 பணியாளர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும்.
தற்போது, பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆண்டுக்கு சுமார் 7500 கோடி ரூபாயை ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 38% ஆகும். இந்த செலவினத்தைக் குறைத்து ஆண்டுக்கு 5000 கோடி ரூபாயாகக் குறைக்கும் நோக்கில் 2வது முறையாக VRS திட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிர்வாகக் குழு ஊதியச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக வி.ஆர்.எஸ் திட்டத்திற்கு திங்களன்று ஒப்புதல் அளித்தது என டைம்ஸ்நவ் தெரிவித்துள்ள. இதற்கான ஒப்புதலை பெற தற்போது தொலைத்தொடர்பு துறை மத்திய நிதியமைச்சகத்திடம் கேட்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவைகளை இன்னும் முழுமையாக அறிமுகம் செய்யாத நிலையிலும், BSNL தொடர்ந்து புதிய வாடிக்கை பெற்று வந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு செலவுகளை குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
2024-25 நிதியாண்டில், பிஎஸ்என்எல் 21,302 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட சிறிய அளவு மட்டுமே அதிகம். தற்போது நிறுவனத்தில் 30,000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அல்லாத பணியாளர்களும், 25,000 நிர்வாகப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
2019 ஆம் ஆண்டில், அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் வி.ஆர்.எஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் 93,000 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்.


Click it and Unblock the Notifications