2026 - 27 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் விவசாயிகள் தங்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதில் மிக முக்கியமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து இந்த துறையை வலுப்படுத்தவும் மத்திய அரசு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிஎம் கிசான் என்ற விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களுடைய வேளாண்மைக்கு உரம் வாங்குவது மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற தேவைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. நலிவடைந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் இந்த பணமானது விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 21 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் 22 ஆவது தவணை பணம் கிடைக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிதியுதவியை 6000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகி இருக்கக்கூடிய நிலையில் வேளாண் செலவினங்கள் அதிகரித்திருப்பதால் அரசு இந்த நிதி உதவியை 6000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டே இந்த தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்த்து விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த பட்ஜெட்டிலாவது அரசு அந்த அறிவிப்பை வெளியிடுமா? என அவர்கள் காத்திருக்கின்றனர்.
இது தவிர விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைய இருப்பதால் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச டீசல் பம்புகளை மட்டுமே நம்பி இருந்த விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பம்புகளை வழங்குவதே பிஎம் குசும் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications