சென்னை: டிஜிட்டல் தங்கம் வாங்குவது கடந்த சில வருடங்களாக பிரபலம் அடைந்து வருகிறது. தங்கம் வாங்குவதற்கு, நகை கடைக்கு செல்வதும், மணிக்கணக்கில் உட்கார்ந்து நகைகளை வாங்குவதும் பலருக்கு சிரமமாக இருக்கிறது. இதுவே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் டிஜிட்டல் தங்கம் வாங்க விரும்புவதற்குக் காரணமாக உள்ளது.
தங்க நகைகள், வைர நகைகள், ரோஸ் கோல்ட் நகைகள், வெள்ளி நகைகள், வாகனங்கள், புது வீடு போன்ற விலைமதிப்பற்ற சொத்துக்களை வாங்குவதற்கு அட்சய திருதியை ஒரு நல்ல நாளாகக் கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று சொத்துக்களை வாங்குவது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றுத் தருவதாக நம்பப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தங்க நகை வாங்குவது பாரம்பரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல நேரங்களில் மக்கள் ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்கின்றனர். அதன் ஒரு விதமாக தற்போது டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடைகளுக்கு சென்று தங்கம் வாங்குவதை விட, இளைஞர்கள் தற்போது டிஜிட்டல் தங்கங்களை வாங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தங்கச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான மக்கள் fintech தளங்களைப் பயன்படுத்தி தங்கம் போன்ற பொருள்களை அதில் வாங்குகின்றனர். KPMG தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில், தங்கச் சந்தையின் வளர்ச்சி $100 பில்லியனை எட்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த அட்சய திருதியை நாளில் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவதற்கு நுகர்வோர் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணங்களை ஜாரின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Nischay AG பகிர்ந்துள்ளார்.
வசதி: 24 மணி நேரமும் மொபைல் மூலமாக உங்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தான் நாட்டில் பெரும்பாலான நகை கடைகள் இயங்குகின்றன. இந்தப் பிரச்சனை ஆன்லைனில் டிஜிட்டல் தங்கம் வாங்கும்போது இருக்காது.
எளிதான பணப்பரிவர்த்தனை: UPI கட்டணங்களை செலுத்தி டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் போது, ஆன்லைனில் தடையற்ற, காகிதம் இல்லா அனுபவத்தைப் பெற முடியும். இதன் விளைவாக விரைவான மற்றும் எளிதான பணப்பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
விலை: கடைகளில் விற்பனையாகும், தங்கத்தின் விலை மாநிலத்திற்கு, மாநிலம் மாறுபடலாம். ஆனால் இணையதளத்தில், டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது அனைத்து தளங்களிலும் ஒரே விலை தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது வர்த்தக சந்தையின் ரியல் டைம் விலை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, MMTC Pamp போன்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறிய முதலீடுகள்: கடைகளைப் போல அல்லாமல் குறைந்த அளவிலான நகைகளை வாங்குவதற்கு, இந்த டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் உதவுகின்றன. குறைந்தது ரூ.10 ரூபாய் முதல் நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.
தர உத்தரவாதம்: நீங்கள் ஆன்லைனில் வாங்கும் தங்கத்தின் தூய்மை அல்லது தரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவை அனைத்தும் தர சான்று பெற்றவை. தரசான்றிதழுடன் நீங்கள் 24K, 22K டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.
ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் தங்கம் வாங்குவது குறைந்த அளவில் பணம் இருப்பவர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் நீங்கள் நகை வாங்கும் இணையதளத்தைப் பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் போலியான இணையதளங்களில், சிலர் நகை விற்பதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
எனவே, நீங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்க இருக்கும் இணையதளம், அங்கீகாரம் பெற்றதா.. என்பதை தெரிந்து கொண்ட பின் பர்ச்சேஸ் செய்யவும்.


Click it and Unblock the Notifications