டெல்லி: இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலக சுற்றுலா தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான கிஞ்சாரப்பு ராம்மோகன் நாயுடு கலந்து கொண்டார்.
அப்போது 2047 ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கினை எட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் சுற்றுலாத்துறையின் மேம்படுத்தும் பொருட்டு விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை இணைக்கப்படாத பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் விமான நிலையங்களை அமைப்பதற்கு இடங்களை கண்டறிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு போக்குவரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது என கூறிய அவர் விமான நிலையங்களில் நவீன வசதிகளை கொண்டு வருவது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவிற்கே உரிய பன்முகத்தன்மையுடன் விமான நிலையங்களில் சிறந்த வரவேற்பு அளிப்பது ஆகியவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவின் கேட்வேயாக இருப்பது விமான நிலையங்கள் தான் என தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 157 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 350 ஆக உயரும் என கூறினார். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன 4.6 கோடி பயணிகள் மட்டுமே வந்து சென்றனர்.
அதுவே தற்போது 157 ஆக அதிகரித்துள்ளது நமது விமான நிலையங்களில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணிகள் வந்து செல்கின்றனர் என கூறினார். சாதாரண மக்களும் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் வகையில் உடான் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதே தங்கள் அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பாக சலோ இந்தியா என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்படி இந்தியாவிற்கு வருகை தரும் ஒரு லட்சம் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கும் அமைச்சர் கிஞ்சாரப்பு ராம்மோகன் நாயுடு வரவேற்பு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் செப்டம்பர்ட் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் சுற்றுலாவும் அமைதியும் என்பதாகும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications