ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி 2020 ஆம் ஆண்டில், சுமார் 700 மில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அவருக்கு கடன் கொடுத்த மூன்று சீன வங்கிகள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அனில் அம்பானியை 100 மில்லியன் டாலர்களை செட்டில் செய்ய உத்தரவிட்டது.
அந்த நேரத்தில், அனில் அம்பானி, "எனது முதலீடுகளின் மதிப்பு சரிந்துவிட்டது" என்று லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தது இந்தியா வர்த்தக சந்தையை உலுக்கியது. "எனது கடன்களுக்காக என்னுடைய வங்கி கணக்குகள் எடுத்துக்கொண்ட பிறகு எனது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாகும். இந்த 100 மில்லியன் டாலர் தொகையை அளிக்க என்னிடம் மதிப்புடைய எந்த சொத்துகளும் இல்லை." என கூறினார்.

கிட்டத்தட்ட இதே நிலையைப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இயங்கி வரும் பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவிந்திரனுக்கு வந்துள்ளது.
இந்திய எட்டெக் துறையின் முதன்மையான நிறுவனமாக இருக்கும் BYJU'S நிறுவனரான பைஜூ ரவீந்திரன், இந்திய பில்லியனர்கள் பட்டியலில் இருந்து படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் மொத்தமாகத் தூக்கியெறியப்பட்டு உள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டு பணக்காரர் பட்டியலில், பைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ.17,545 கோடி (2.1 பில்லியன் டாலர்) என்பதிலிருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. சர்வதேச ஸ்டார்ட்அப் சந்தையில் மிகவும் பிரபலமான முகமாக இருந்த பைஜூ ரவீந்திரனின் இந்த வீழ்ச்சி, அவரது நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளைப் படம்போட்டுக் காட்டுகிறது.
BYJU'Sஸின் மதிப்பு உயர்வு: 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட BYJU'S நிறுவனம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க எட்டெக் நிறுவனமாக விரைவாக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 22 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டியது.
பைஜூஸ் நிறுவனம் தொடக்கப்பள்ளி மாணவர்களில் இருந்து MBA பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு கல்வி சேவைகளை தனது டிஜிட்டல் தளத்தின் வாயிலாக உருவாக்கி அளித்து வருகிறது. பைஜூஸ்-ன் சாதனை கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்துள்ளது.
இது அனைத்தும் நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்காதது, மதிப்பீடு சரிவு, நிதி கையாளுதலில் சர்ச்சை, முதலீட்டாளர்களின் அடுத்தடுத்து வழக்கு என அடுத்தடுத்து இந்த நிறுவனத்தின் நற்பெயர் இழந்து அதன் மதிப்பைக் குறைத்துள்ளன.
நிதிச் சிக்கல்கள்: BYJU's நிறுவனத்தின் நிதி சிக்கல்கள், 2022 மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டிற்கான கணக்குகளைத் தாமதமாக வெளியிட்டபோது வெளிச்சத்திற்கு வந்தன. அந்த அறிக்கையில், 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட நிகர இழப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
பிளாக்ராக்: இந்த மோசமான செயல்பாடு காரணமாக, முதலீட்டாளர்களில் ஒருவரான பிளாக்ராக் (BlackRock) நிறுவனம், BYJU'Sஸின் மதிப்பை 1 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைத்துள்ளது. இது நிறுவனத்தின் உச்ச மதிப்பான 22 பில்லியன் டாலர் மதிப்பில் சிறு பகுதியே.
இதன் பின்பு முதலீட்டாளர்களுடனான பிரச்சனை, வழக்கு, அவரச கூட்டம், ஊழியர்கள் பணிநீக்கம், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க பைஜூ ரவிந்திரன் தனது சொத்துகள், வீட்டையும் அடமானம் வைத்த சம்பவம், பல கட்டங்களாக 2022 முதல் இன்று வரையில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications