இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமாக இருந்த பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நம்பிக்கைக்குரியவருமான அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைஜு ரவீந்திரன், நிறுவனத்தை எப்படியாவது லாபகரமான நிலைக்குத் திருப்ப வேண்டும் என முக்கியமான இலக்குடன் சிஇஓ பொறுப்பை அர்ஜுன் மோகன்-க்கு கொடுத்தார். இவர் வந்த உடனேயே ஊழியர்களை பணிநீக்கம் திட்டத்தை அறிவித்து அனைவரையும் கலங்கடித்தார். ஆனால் பைஜூஸ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

பைஜூஸ் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் சிஇஓ பதவியை ஏற்று வெறும் ஆறு மாதங்களுக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். சிஇஓ அர்ஜுன் மோகன் ராஜினாமா குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கனவே மோசமாக இருக்கும் வேளையில், சிஇஓ அர்ஜுன் மோகன் வெளியேற்றம் கூடுதல் பிரச்சனையாக மாறியுள்ளது. பைஜுஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் பல சிக்கல்கள் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் சண்டை போட்டு வரும் வேளையில் சிஇஓ ராஜினாமா செய்தி வந்துள்ளது.
அர்ஜுன் மோகன் வெளியேறியதைத் தொடர்ந்து, திங்க் அண்ட் லேர்ன் கீழ் இயங்கும் இந்திய வணிகத்தின் அன்றாட நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் பைஜூ ரவீந்திரன் எடுத்துக் கொள்வார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பைஜூ ரவீந்திரன் நிறுவனத்தின் தினசரி பணிகளை நிர்வாகம் செய்ய உள்ளார். தற்போதைய திட்டங்களின்படி, இந்த முக்கியமான மாற்றங்கள் குறித்து நிறுவனத்தின் மட்டத்தில் ஒரு அறிவிக்கை வெளியிடப்படலாம்.
கடந்த ஆண்டு மிருணாள் மோஹித்துக்குப் பதிலாக அர்ஜுன் மோகன் சேர்க்கப்பட்டார். அவர்கள் இருவரும் பைஜூ ரவீந்திரனின் CAT தேர்வின் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள், ஆரம்ப நாட்களில் ரவீந்திரனின் முன்னாள் மாணவர்கள் ஆவார்.
பைஜூ ரவீந்திரன் சிஇஓ பதவிக்கு வந்தால் கூடுதலாகப் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஒருபக்கம் முதலீட்டாளர்கள் உடனான போராட்டம், மறுபுறம் நிர்வாகம், வருவாய் இலக்கு, செலவுகளைக் குறைத்தல் போன்ற பல முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications