பைஜூஸ் நிறுவனம் எவ்வளவு வேகமாக இந்தியாவில் வளர்ச்சி அடைந்ததோ தற்போது அதை விட வேகமாக வீழ்ந்து வருகிறது. Edtech எனப்படும் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக தொடங்கி கோடிகளில் வருவாய் ஈட்டி தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் நிற்கிறது.
பைஜூஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி: 2011ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் கல்வி ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ் கொரோனா காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்தது.

கோடிகளில் வருமானம் ஈட்டி வந்த பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை அடுத்து பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது.
அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ் பல சவால்களை சந்திக்கத் தொடங்கியது.
அடுத்தடுத்து நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் முதலீட்டாளர்கள் பலரும் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த ஊழியர்களை பணிநீக்கியது.
கடனை திரும்ப செலுத்த முடியாதது தொடங்கி ஒருகட்டத்தில் வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை: இந்நிலையில் பைஜூஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியமான ரவீந்திரன் முதலீட்டாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் .
முதலீட்டாளர்களின் செயல்பாட்டால் நிதிகள் தனி கணக்கில் சிக்கி இருப்பதால் ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பைஜூஸ் நிறுவனத்தின் நான்கு முதலீட்டாளர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்தது. வழக்கில் தீர்ப்பு வரும் வரை உரிமைகள் வழங்கலில் இருந்து பெறப்பட்ட நீதியை ஒரு எஸ்க்ரோ கணக்கில் வைத்திருக்கும் படி உத்தரவிட்டது .
முதலீட்டாளர்களே காரணம் என புகார்: பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம், உரிமை வழங்கல் மூலம் 200 மில்லியன் டாலர்களை திரட்டியது. இந்த நிதியை கொண்டு சிக்கல்களை தீர்க்க முடிவு செய்தது. ஆனால் முதலீட்டாளர்கள் அந்த தொகையை பயன்படுத்த முடியாத வகையில் தனி கணக்கில் வைத்துள்ளனர்.
நமது 150 முதலீட்டாளர்களில் நான்கு பேர் இதயமற்ற நிலைக்கு தாழ்ந்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்து ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள பைஜூஸ் ரவீந்திரன், சிலரது செயலால் உங்களது கடின உழைப்பால் சம்பாதித்த ஊதியத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கவலையில் ஊழியர்கள்: உரிமைகள் வழங்கல் மூலம் திரட்டப்பட்ட தொகை தற்போது ஒரு தனி கணக்கில் சிக்கியுள்ளது என அவர் கூறியுள்ளார். சிறந்த முயற்சிகள் செய்த போதிலும் உங்களுக்கு தகுதியான நிதி ஆதரவை நாங்கள் தற்காலிகமாக வழங்க இயலாது என இதயத்தை உடைக்கும் யதார்த்தத்தை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க செய்வதை உறுதி செய்ய நாங்கள் பாடுபடுகிறோம் என அவர் கூறியுள்ளார். இதனால் பைஜூஸ் நிறுவன ஊழியர்கள் மேலும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications