இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும், இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிச் செலுத்தவும், நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றவும் எந்த முயற்சிகள் வேண்டும் என்றாலும் எடுக்கத் தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் பைஜூஸ் கொரோனா காலத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியில் இருக்கும் போது, அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஒரு நிறுவனத்தைத் துவங்கியது. ஆனால் இந்த முயற்சியில் எவ்விதமான பலனும் அளிக்காத நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனத்தைத் திவாலானதாக அறிவித்துள்ளது.

திவால் பாதுகாப்பைக் கோரி அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் சாப்டர் 11 என்ற அதிகாரப்பூர்வ திவால் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் பைஜூஸ் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் அளவுக்கான கடன் நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பைஜூஸ் ஆல்பா பிரிவு தற்போது சமர்ப்பித்துள்ள திவால் பாதுகாப்பு சாப்டர் 11 அறிக்கையில், தனது சொத்து மதிப்பாக 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலராக இருக்கும் என அறிவித்துள்ளது. ஆனால் அந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் பைஜூஸ் அமெரிக்கப் பிரிவின் சொத்துக்களை 100 முதல் 199 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே மதிப்பிட்டு உள்ளனர்.
2022 ஆம் ஆண்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகம் மதிப்பிடப்பட்ட எட்டெக் நிறுவனமாகப் பைஜூஸ் விளங்கியது. 2022 கொரோனா தொற்று காலத்தின் உச்சத்தில் பைஜூஸ் சுமார் 22 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது அதன் முதலீட்டாளர்கள் 1- 3 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளனர்.
பைஜூஸ் திங்கட்கிழமை சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான உரிமை வெளியீட்டின் மூலம் முக்கியக் கடன் நிலுவைகளைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் நிறுவன செலவுகளையும் குறைக்க முயற்சி செய்வதாக அறிவித்துள்ளது. இதேபோல் பைஜூஸ் கடந்த சில மாதங்களாக 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான குறுகிய காலக் கடனை தீர்க்க முயற்சி செய்து வருகிறது.
இதேவேளையில் பைஜூஸ் நிறுவனமும், அதன் நிறுவனர்களான பைஜூஸ் ரவிந்தரன், திவ்யா கோகுல்நாத் ஆகியோர் மீது வெளிநாட்டு நிதி பரிமாற்ற விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் தான் அமெரிக்க வர்த்தகப் பரிவைக் கடன்களைத் திருப்பிச் செலுத்திவிட்டு மூட முடியாமல் திவாலாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications