விலைவாசி உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு கனடாவையும் விட்டு வைக்கவில்லை. அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை காரணமாக கனடாவில் பலர் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு கனடா மக்களை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.
இதன் காரணமாக கனடாவில் வசிக்கும் 25 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளைத் தவிர்த்து தங்கள் குழந்தைக்கு உணவளிப்பதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை சால்வேஷன் ஆர்மி என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"பல கன்னடியர்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், முக்கியமாக தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையானதை செய்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்" என்று சால்வேஷன் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அதோடு இந்தக் கணக்கெடுப்புக்காக பதில் அளித்த 90% பேர் தங்களுடைய நிதி கடமைகளுக்காக போதுமான பணத்தை சேமிக்க மளிகை பொருட்கள் வாங்குவதற்கான செலவை குறைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கவும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சரி செய்யவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் ஃபுட் பேங்க் என்று சொல்லப்படுகிற உணவு வங்கிகள் இருக்கும். இங்கு அத்தியாவசிய உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கப்படும். அதேபோல கனடாவின் டெய்லி பிரட் ஃபுட்பேங்க் மற்றும் நார்த்யோர்க் ஹார்வெஸ்ட் ஃபுட்பேங்க் ஆகியவை இதுவரை இல்லாத அளவில் மக்கள் வரத்து இருப்பதாக தெரிவித்தது.
நகரத்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் தங்களிடம் உணவுகளை பெறுவதாக ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கு ஏதுவாக 2023-ஆம் ஆண்டில் கனடா முழுவதும் 3.5 மில்லியன் மக்கள் இது போன்ற உணவு வங்கிகளைப் பயன்படுத்தி பொருட்களை பெற்றனர். இது 2022-ஆம் ஆண்டை விட 36 சதவீதம் அதிகமாகும்.
2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் 2024-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி வரை டொரன்டோ ஃபுட் பேங்க் 3.49 மில்லியன் வாடிக்கையாளர் வருகையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 1 மில்லியன் அதிகமாகும். இந்த எண்ணிக்கை டோரண்டோ நகரத்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.. கனடாவில் பெரும்பான்மையான மக்களை தங்கள் வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக உணவு பற்றாக்குறை காரணமாக கனடாவில் வசிக்கும் பல குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடியை சரி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications