சென்னை: ஆண்டுக்கு ஒரு முறை வரும் அட்சய திருதியை, என்றாலே நகை கடைக்காரர்களுக்கு ஏகக் குஷி தான். ஏனெனில், அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் மென்மேலும் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் தங்கம், வெள்ளி, நிலம் போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அட்சய திருதியைக்கு வாங்குவது குறித்து தான் பலருக்கு தெரியும். ஆனால், அன்றைய தினம் நீங்கள் வேறு சில பொருட்களையும் கூட வாங்கலாம். அவை என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
அட்சய திருதியை 2024: இந்த வருடம் அட்சய திருதியை, நாளை கொண்டாடப்பட உள்ளது. அட்சயம் என்றால் "என்றும் குறைவில்லாதது" என்பது பொருள். அட்சய திருதியை அன்று வாங்கும் பொருட்கள் அல்லது அன்றைய தினம் தொடங்கும் தொழில், மென்மேலும் வளரும் என்பதால் இந்த குறிப்பிட்ட நாளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

எப்பொழுதுமே நம் நாட்டில் இது போன்ற நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரக்கூடும். இதுபோன்ற முதலீடுகளை பாரம்பரியமான நாட்களில் செய்ய வேண்டும் என்பதுதான் மக்கள் மத்தியில் உள்ள நீண்ட நாள் நம்பிக்கை. அட்சய திருதியை இந்தியாவில் மட்டுமின்றி நேபாளத்திலும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மக்கள் அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தரும் என்று நம்புகின்றனர். அதன் அடிப்படையில் நீங்கள் வேறு எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதைப் பார்ப்போம்.
தங்கம்: இந்து புராணங்களின்படி தங்கத்திற்கு உரிய தெய்வமாக லட்சுமிதேவி இருக்கிறார். அவர் அட்சய திருதியை அன்று பிறந்ததாக ஐதீகம் உள்ளது. மேலும் தங்கம் வாங்குவது லட்சுமிதேவியை மகிழ்விப்பதாகவும் மற்றும் ஆசிர்வாதத்தைப் பெறுவதாகவும் கருதப்படுகிறது.
வெள்ளி: அட்சய திருதியை அன்று வெள்ளி நகைகளை வாங்கி குபேரருக்கு வழிபட்டால் தொடர்ந்து செல்வம் குவியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி தங்க நகைகள் வாங்க முடியாதவர்கள் வெள்ளி நகைகளை வாங்கலாம்.
வீடு: அட்சய திருதியை அன்று புதிய வீடு வாங்குவது, குடும்பத்தை திருஷ்டி மற்றும் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் வீடு வாங்குவது ஒட்டுமொத்த நல்வாழ்வை நோக்கி மக்களை பயணிக்க வைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடைகள்: பொதுவாக ஆடைகள் என்றாலே, நமக்கு ஒரு தன்னம்பிக்கை வரும். எனவே, இது போன்ற நாட்களில் புதிய ஆடைகளை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பாத்திரங்கள்: காப்பர், பித்தளை, சில்வர் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை வாங்கலாம். தங்கம் மற்றும் வெள்ளி மிகவும் விலை உயர்வாக இருக்கிறது என்று என்னும் சிலர், இதுபோன்ற பொருட்களை வாங்கி பூஜை செய்து பயன்படுத்தலாம்.
ஸ்ரீ சக்கரம்: அட்சய திருதியை அன்று ஸ்ரீ சக்கரத்தை வாங்கி பூஜையறையில் வைத்து வழிபடலாம். இதன் மூலம் லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விதைகள்: விதைகள் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று விதைகள் வாங்கி, உங்கள் வீட்டு தோட்டங்களிலோ அல்லது சாலை ஓரங்களிலோ விதைப்பதன் மூலம், ஒரு புதிய தொடக்கம் உருவாகும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications