டெல்லி: அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது . இதனால் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்கள் பலவும் பாதிக்கப்பட உள்ளன. இதில் அதிக பாதிப்பை சந்திப்பது ஜவுளி உற்பத்தியாளர்கள் தான்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 28% ஜவுளி அமெரிக்காவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை இதனை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் ஒரு துறையாக ஜவுளி உற்பத்தி இருக்கிறது. இந்திய ஜிடிபியில் இதன் பங்கு 2.3 சதவீதம், தொழில்துறை உற்பத்தியில் இதன் பங்கு 13 சதவீதம், ஏற்றுமதியில் இதன் பங்கு 12 சதவீதமாகும்.

அமெரிக்க அரசின் வரி விதிப்பு தற்போது நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு பகுதியை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர். இந்த சூழலில் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நற்செய்தியை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கை நீட்டித்திருக்கிறது. இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு செப்டம்பர் 30ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதிக்கு வரி கிடையாது என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
50% வரி விதிப்பு அமலுக்கு வந்ததை அடுத்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு வரி கிடையாது என கூறி இருக்கிறது. பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை நீட்டித்து இருக்கிறோம் என அறிக்கையில் சுட்டி காட்டி இருக்கும் மத்திய நிதி அமைச்சகம் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பலன் பெறுவார்கள் என்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை இது வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உள்நாட்டு சந்தையில் பருத்தி கிடைப்பதை இது உறுதி செய்யும் என்றும் இதன் மூலம் ஜவுளி பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவுகளை குறைப்பது மூலம் ஜவுளி துறையில் சிறு குறு மற்றும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications