2 வருட போராட்டத்திற்குப் பின் வாராக் கடன் மூலம் திவாலாகியுள்ள பிஎம்சி வங்கிக்கும், இவ்வங்கியின் பல ஆயிரம் டெப்பாசிட் செய்துள்ள மக்களுக்கும் விடிவு காலம் பிறந்துள்ளது.
37 வருடமாக இயங்கி வரும் பிஎம்சி வங்கியை NBFC நிறுவனமான சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனமான பார்த்பே ஆகிய இரு தரப்பும் இணைந்து கைப்பற்ற உள்ளது.
இந்தியாவில் பல வங்கிகள் கடன் மோசடியில் சிக்கியுள்ள காரணத்தால் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎம்சி வங்கிக்குத் தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது.
பிஎம்சி வங்கிக்குத் தீர்வு
பிஎம்சி வங்கியைக் கைப்பற்ற 4 பேர் போட்டிப் போட்ட நிலையில் ரிசர்வ் வங்கி NBFC நிறுவனமான சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பார்த்பே கூட்டணியைத் தேர்வு செய்துள்ளது.
ஸ்மால் பைனான்ஸ் வங்கி
இதுமட்டும் அல்லாமல் பிஎம்சி வங்கியை ஸ்மால் பைனான்ஸ் வங்கியாக மாற்றவும், அதற்காகச் சென்ட்ரம் பைனான்ஸ் நிறுவனத்தின் NBFC உரிமத்தை ரத்து செய்யப்பட்டு, SFB உரிமத்தைக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
பிஎம்சி வங்கி - HDIL நிறுவன கடன்
பிஎம்சி வங்கி நிர்வாகம் முறையற்ற வகையில் தனது மொத்த கடன் அளவான 8880 கோடி ரூபாயில் சுமார் 73 சதவீதம் தொகையை அதாவது 6500 கோடி ரூபாய் அளவிலான கடனை பல்வேறு கடன் மோசடியில் சிக்கியுள்ள வந்வானின் HDIL நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
பிஎம்சி வங்கியின் நிலை
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎம்சி வங்கி 2020ஆம் நிதியாண்டில் 6,835 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தையும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு -5,850 கோடி ரூபாயாகச் சரிந்தது.
மக்களின் டெப்பாசிட் தொகை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிஎம்சி வங்கியில் 10,723 கோடி ரூபாய் அளவிலான மக்களின் டெப்பாசிட் தொகை உள்ளது. இதேவேளையில் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன் உடன் உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முடிவின் அடிப்படையில் தான் யாருக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும் எனத் தெரியும்.
120 நாள் அவகாசம்
தற்போது பிஎம்சி வங்கியைக் கைப்பற்றியுள்ள சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பார்த்பே கூட்டணிக்கு ரிசர்வ் வங்கி 120 நாள் அவகாசம் அளித்துள்ளது. இதுகுறித்த காலகட்டத்திற்குள் பிஎம்சி வங்கியை ஒரு ஸ்மால் பைனான்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும்.
1800 கோடி ரூபாய் புதிய முதலீடு
இதேவேளையில் பிஎம்சி வங்கியில் சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் பார்த்பே கூட்டணி சுமார் 1800 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் புதிதாக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் பல நிறுவனங்களை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கைப்பற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications