இந்தியப் பங்குச்சந்தையில் விலை உயர்ந்த பங்காகக் கருதப்படும் எம்.ஆர்.எஃப் நிறுவனம் கடந்த 2 முறை வெறும் 3 ரூபாய் என்ற சொற்பமான டிவிடெண்ட் அறிவித்ததற்காக சமூக வலைத்தளங்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கிண்டலுக்கு ஆளானது.
இந்த நிலையில் மொத்த கிண்டல், கேலிகளை துடைத்தெறிந்த MRF நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்டாக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பங்கிற்கு சுமார் 194 ரூபாயை ஈவுத்தொகையை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

10 ரூபாய் முக மதிப்பு கொண்ட MRF பங்குகளுக்கு சுமார் 1940% அடிப்படையில் பங்கு ஒன்றுக்கு ரூ.194 என்ற இறுதி டிவிடெண்டை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
மார்ச் 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஏற்கனவே ஒரு பங்கிற்கு ரூ.3 (30%) வீதம் இடைக்கால டிவிடெண்ட் ஆக 2 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2024 ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான மொத்த டிவிடெண்ட், பங்கு ஒன்றுக்கு ரூ.200 (2000%) வழங்க உள்ளது என இந்நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.341 கோடியாக இருந்த லாபத்தை விட, இந்த நிதியாண்டில் ரூ.396 கோடி லாபம் ஈட்டியுள்ள MRF நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் லாபத்தில் 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.5,842 கோடியாக இருந்த வருவாய், 2024 மார்ச் காலாண்டில் ரூ.6,349 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செலவுகள், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.5,410 கோடியாக இருந்த நிலையில் 9% உயர்ந்து, இந்த காலாண்டில் ரூ.5,916 கோடியாக உள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாட்டின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று MRF. இந்நிறுவனப் பங்குதான் நாட்டின் விலை உயர்ந்த பங்காக உள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை முதல் முறையாக ரூ.1,00,000 என்ற மைல்கல்லை எட்டியது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தது மூலம் ஒரு பங்கு விலை 4.06 சதவீதம் சரிந்து 1,28,495 ரூபாயாக உள்ளது. MRF பங்குகளின் வரலாற்று உச்ச விலை 1,51,283 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications