தங்கம். நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் மற்றும் மாத சம்பளதாரர்களுக்கு, தங்கத்தை நகைகளாக போட்டுக் கொள்வோம். மிஞ்சிப் போனால், அடமானம் வைத்து பணம் திரட்டக் கொள்வோம்.
ஆனால் இதை ஒரு நல்ல முதலீடாக பார்ப்பது தான் பணக்காரர்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பார்வை.
கொரோன வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் அதை நிரூபித்து இருக்கிறார்கள்.
பாதுகாப்பு
பொதுவாக உலக பங்குச் சந்தைகளில் ஒரு நிலை இல்லா தன்மை, அல்லது பயம் மேலிடும் போது, பாதுகாப்பாக பணத்தை தங்கத்தில் கொண்டு வந்து முதலீடு செய்துவிடுவார்கள். தங்கமும் எப்போது எல்லாம் உலக சந்தைகளில் பதட்டம் அதிகரிக்கிறதோ அப்போது எல்லாம் விலை ஏறத் தொடங்கிவிடும்.
சாட்சி விலை ஏற்றம்
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 2019 ஜனவரி 01-ல் 31,650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஏப்ரல் 15, 2020-ல் 45,660 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்த காலத்தில் தங்கத்தின் விலை சுமாராக 44 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது என்றால் என்ன சொல்வீர்கள்.
எம்சிஎக்ஸ் தங்கம்
கடந்த மார்ச் 06, 2020 அன்று எம்சிஎக்ஸில் 10 கிராம் தங்கம் ஃப்யூச்சர்ஸ் 45,361 ரூபாயைத் தொட்டது. அது தான் தங்கத்தின் சமீபத்தைய உச்சமாக இருந்தது. ஆனால் இன்று அதே 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை 46,740 ரூபாயைத் தொட்டு, அலறவிட்டு இருக்கிறது.
அடுத்த காண்டிராக்ட்
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், எம்சிஎக்ஸ் சந்தையில் அடுத்த ஆகஸ்ட் 2020 மாத தங்க காண்டிராக்டும், சுமார் 46,900 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது இன்னும் விலை ஏறுவதற்கான அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கைப் பார்த்தால், தங்கம் 50,000-த்தை தொட்டுவிடும் போலிருக்கிறதே!
சர்வதேச தங்கம்
சர்வதேச அளவிலும் ஸ்பாட் தங்கத்தின் விலை அசுரத் தனமாக ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த மார்ச் 2020-ல் 1,680 டாலரைத் தொட்டது தான் சமீபத்தைய உச்சமாக இருந்தது. ஆனால் இன்று 1,731 டாலரைத் தொட்டு அசால்ட் காட்டிக் கொண்டிருக்கிறது. சர்வதேச தங்கம் விலை தன் பழைய உச்சத்தை உடைக்க வாய்ப்பு இருப்பதை முந்தைய கட்டுரைகளில் சொல்லி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தங்கம் டிமாண்ட்
அது போக, உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்திருக்கும் ETF ஃபண்டான SPDR Gold Trust-ன் தங்கம் கை இருப்பு அதிகரித்து இருக்கிறது. தற்போது 1,009 டன் தங்கத்தை, தன் கைவசம் வைத்திருக்கிறது. இது, கடந்த ஜூன் 2013-க்குப் பிறகு இந்த ஃபண்ட் வைத்திருக்கும் அதிகப் படியான தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
கொரோனாவால் உலக பொருளாதாம், 2020-ம் ஆண்டு சுமார் 3% சரியலாம் என பன்னாட்டு நிதியம் (IMF) சொல்லி இருக்கிறது. இது 1930 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உலகம் காணம் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி. இந்த பொருளாதார வீழ்ச்சி + வட்டி விகிதங்கள் குறைவு என எல்லாம் சேர்ந்து தங்கத்தை விலை ஏற்றி ஒரு சூப்பர் ஹீரோ ஆக்கிக் கொண்டு இருக்கிறது.
சென்னையில் விலை ஏற்றம்
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 01 அன்று 43,080 ஆக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை சின்ன சின்ன விலை சரிவு இருந்தாலும், நல்ல விலை ஏற்றம் கண்டிருக்கிறது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,660 ஆக அதிகரித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பவுனுக்கு எவ்வளவு
கடந்த 15 நாட்களில், சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 2,580 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு 2,064 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 258 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications