சென்னையில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி சாதாரண மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி வருகிறது. சென்னையில் இன்றைய தினம் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 79,000 ரூபாயை நெருங்கிவிட்டது.
வரலாறு காணாத உச்சம்: சென்னையில் பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 73,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து தங்கம் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது .செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது . நேற்றைய தினம் சற்றே குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வை எட்டி இருக்கிறது.

ரூ.79,000ஐ நெருங்கிய தங்கம்: சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9,865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தை விட இன்று ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது நேற்று 78, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 560 ரூபாய் விலை உயர்ந்து 78,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டதட்ட 79 ஆயிரம் ரூபாயை ஒரு சவரன் தங்கம் நெருங்கி இருக்கிறது.
15 நாட்களில் எவ்வளவு உயர்வு: சாமானிய மக்கள் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட நகை விலை , செய்கூலி சேதாரம் (14% என வைத்து கொண்டால்) மற்றும் ஜிஎஸ்டி (3%) என சேர்த்து சராசரியாக 90,000 ரூபாய் வரை செலவிட வேண்டி இருக்கும். சென்னையை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து தற்போது வரையிலான இந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 685 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது ஒரு சவரனுக்கு 5,480 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது .15 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 5,480 ரூபாய் வரை விலை உயர்வு கண்டிருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை: சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 76 ரூபாய் விலை உயர்ந்து 10,762 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 86,096 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் விலை உயர்வு கண்டு 65,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை: சென்னையில் இன்றைய தினம் வெள்ளி விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் விலை குறைந்த 136 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,000 ரூபாய் விலை குறைந்து 1,36,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
தங்கம் விலை மேலும் உயருமா? :தங்கத்தின் இந்த விலை உயர்வு அப்படியே நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அரசு இந்தியா மீது விதித்துள்ள இறக்குமதி வரி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகள் தங்கத்தின் விலையை உயர்த்தி வருகின்றன. இது போக இந்தியாவிலும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுப்பது, அமெரிக்க இந்திய வர்த்தக மோதல் தணிவது ஆகியவை தான் தங்கத்தின் விலையை குறைக்கும்.


Click it and Unblock the Notifications