தமிழ் மக்களின் பிரியமான உணவு இட்லி தான். இது பலருக்கும் பிடித்த ஆரோக்கியமான காலை உணவாக உள்ளது. ஆனால், சென்னையில் உள்ள பிரபல உணவகமான அடையார் ஆனந்த பவன் (A2B), இளமையை மீட்டுத் தரும் இட்லியை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த இட்லி ரூ.500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது உண்மையிலேயே ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமா அல்லது பணம் பண்ணும் யுக்தியா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்த புதிய இட்லி குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில், "A2B-இன் ரூ. 500 இட்லி - புளுபெர்ரி, தோல் நீக்கப்பட்ட ஊறவைத்த பாதாம், ஆலிவ் எண்ணெய், குங்குமப்பூ, வெண்ணெய், சாம்பார் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றைக் கொண்ட மென்மையான இட்லியின் சுவையை இந்த இட்லியின் மூலம் நீங்கள் பெறலாம் என்று எழுதியுள்ளனர்.

AIWO என்று சொல்லப்படுகிற ஹெல்த் & வெல்னஸ் சென்டர் மற்றும் அடையார் ஆனந்த பவன் ஆகிய இரண்டும் இணைந்து இந்த இட்லியை உருவாக்கியுள்ளனர். ஆலிவ் எண்ணெய், புளுபெர்ரி, ஆளி விதைகள், பாதாம், ஷிடேக் காளான் சாறு, மற்றும் அஸ்வகந்தா போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு இந்த இட்லி தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை முற்றிலும் டாக்டர்களைக் கொண்டு உருவாக்கி உள்ளனர்.
இந்த இட்லியை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் அப்நார்மலாக இருக்கும் 72 பிளட் பயோ மார்க்கர்கள் சரியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இட்லி உங்கள் இளமையை மீட்டுத் தரும் என்றும் சொல்லப்படுகிறது.
புதிய வைட்டமின் நிறைந்த இந்த இட்லி நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, இறக்குமதி செய்யப்பட்ட புளுபெர்ரி பழங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற சுவையை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒன்று என்றும் கூறப்படுகிறது.
ரூ. 500-க்கு விற்கப்படும் இட்லி குறித்து இணையவாசிகள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒருவர், "இந்த இட்லியே தேவையில்லை. லாபத்திற்காக மக்களை ஏமாற்றாதீர்கள். உணவு விமர்சகர்களுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற வீண் பொருளை விற்பனை செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
மற்றொருவர், இது அதிகப்படியான விலை இல்லையா? ரூ.500-க்கு இட்லி அதுவும் ப்ளூபெர்ரி மற்றும் பாதாமுடன், அப்பப்பா மோசமான கலவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த டாக்டர்கள் மற்றும் ஃபுட் பிளாகர்கள் தங்களுடைய கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் என்னதான் சத்துக்கள் மிகுந்த பொருளை சேர்த்தாலும், இளமையை மீட்டுத் தருவதற்கு சாத்தியமில்லை என்று தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
பாரம்பரிய உணவான இட்லியை புதிய பெயரில் அறிமுகப்படுத்தியதன் காரணமாக A2B கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நமது உணவு முறையை மாற்றுவதை விட, சீரான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதும் எப்போதும் நல்லது. ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications