இந்திய பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்து, ஹாங்காப் பங்குச்சந்தையை முந்தி உலகிலேயே 4வது மதிப்புடைய சந்தையாக உருவெடுத்துள்ளது. சீனா பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாகச் சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தை அதிகளவில் சரிந்து வருகிறது.
இந்த மோசமான நிலையைத் தடுக்கச் சீனா அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு, ஒட்டுமொத்த சர்வதேசச் சந்தை முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்திய வேளையில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தை சரிவை சரி செய்யச் சீன அரசு மீட்டெடுப்பு பேக்கேஜ் அறிவிக்க உள்ளது. அதாவது சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் வெளிநாட்டுக் கணக்கில் வைத்திருக்கும் நிதியில் சுமார் 2 டிரில்லியன் யுவான் அதாவது 23.10 லட்சம் கோடி ரூபாயை வைத்து ஹாங்காங் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீன ரியல் எஸ்டேட் மோசமான நிலையில் இருக்கும் போது, பங்குச்சந்தையை மோசமான நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது என்பதற்காக அரசு நிறுவனங்களே சீன நிறுவன பங்குகளைச் சுமார் 278 பில்லியன் டாலருக்கு வாங்குவது மூலம் சந்தையில் சப்ளை குறைந்து பங்குகளின் வீழச்சி குறையும்.
இதேபோல் சுமார் சீன அரசு நிறுவனமான China Securities Finance Corp. அல்லது Central Huijin Investment Ltd ஆகியவற்றின் மூலம் சீனா பங்குச்சந்தையில் 300 பில்லியன் யுவான் மதிப்பிலான பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளது.
சீன பங்குச்சந்தையின் CSI 300 குறியீடு 2023ல் 11.4 சதவீதம் சரிந்தது, ஹாங்காங் 14 சதவீதம் சரிந்தது. 2024 ஆம் ஆண்டிலும் சரிந்தால் CSI 300 குறியீடு தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சரியும் நிலைக்குத் தள்ளப்படும். 2021 உச்சத்தில் இருந்து சீனா - ஹாங்காங் பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு சுமார் 6 டிரில்லியன் டாலர் சரிந்துள்ளது.
சீன அரசு அமைப்பின் தலைமை அதிகாரியான ப்ரீமியர் Li Qiang தலைமையில் நேற்று அந்நாட்டு பங்குச்சந்தை சரிவை கட்டுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்பு ஹாங்காங் சந்தையில் 2 டிரில்லியன் யுவான், சீனா பங்குச்சந்தையில் 300 பில்லியன் யுவான் தொகையை முதலீடு செய்யும் அறிவிப்பு வெளியானது.
சீன ப்ரீமியர் Li Qiang தலைமையிலான இக்கூட்டத்தின் எதிரொலியாக இன்று காலை முதல் உயர்வுடன் இருந்தது ஹாங்காங், சீனா பங்குச்சந்தைகள். ஆனால் சீன அரசின் முதலீட்டு அறிவிப்பு வெளியுலகத்திற்குத் தெரிந்த சில நொடிகளில் இந்திய பங்குச்சந்தை சரியை துவங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72,039.20 புள்ளிகளை அடைந்தது. ஆனால் சீன அரசு அறிவிப்பை தொடர்ந்து 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 71,132.15 புள்ளிகளைத் தொட்டது. ஹாங்காங் Hang seng குறியீடு 3.43 சதவீதமும், ஷாங்காய் கம்போசிட் குறியீடு 0.59 சதவீதம் உயர்ந்துள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் வெளிநாட்டுக் கணக்கில் வைத்திருக்கும் நிதியில் சுமார் 2 டிரில்லியன் யுவான் தொகையை ஹாங்காங் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ள காரணத்தால் இனி வெளிநாடுகளுக்கு அதீத கடன் அளிக்கும் நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications