உலகமே ஈரான் போர் மற்றும் அதனால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பல்வேறு பொருட்களின் விலை வாசி உயர்வு என சிக்கி கொண்டிருக்கும் நிலையில் சீனா மலை மலையாய் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் சீனாவின் தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் சீனா சுமார் 163 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக (மார்ச் 2024-க்குப் பிறகு) பதிவான மிக அதிகபட்ச அளவு இது ஆகும். 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், சீனா சுமார் 692 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 76% அதிகம்.

உலக அளவில் தங்கத்தின் விலை ஜனவரி மாதம் வரலாற்று உச்சத்தை தொட்டது. இதனை அடுத்து வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் விலை 25% வரை சரிந்துள்ளது. இது தான் தங்கம் வாங்க சிறந்த வாய்ப்பு என கருதி அதிக எண்ணிக்கையிலான சீனர்கள் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கம் சேமிப்புத் திட்டங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பொருளாதார நிச்சயமற்ற சூழலில் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக சீன மக்கள் கருதுகின்றனர். சீன நாட்டு அரசும் மக்கள் தங்கம் வாங்கி சேமிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜூன் 1 முதல் சீனாவில் புதிய தங்க இறக்குமதி உரிமம் முறை நடைமுறைக்கு வந்தது. இதன்படி, சில வங்கிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனவே, புதிய முறை தொடங்குவதற்கு முன்பாக, தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கோட்டாவை (quota) பயன்படுத்திக் கொள்ள வங்கிகள் மே மாதத்தில் அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹாங்காங் போன்ற பகுதிகளில் புதிய தங்க வர்த்தக மற்றும் தீர்வு அமைப்பு தொடங்கப்பட உள்ளதால், ஆசிய சந்தையில் தங்கத்திற்கான தேவை வலுவாக உள்ளது. இதுவும் சீனாவில் தங்கம் இறக்குமதி அதிகரிக்க காரணம் என ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது.
உலகளவில் தங்கம் வாங்குவதில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் மற்றும் உலகளாவிய பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சீனாவில் தங்கத்திற்கான தேவை குறையாமல் வலுவாகவே இருப்பது சந்தை நிபுணர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சீன அரசாங்கம் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து தங்களின் கரன்சியான யுவானின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அப்படி யுவானின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் சீனா கைவசம் அதிகளவு தங்கம் இருக்க வேண்டும். இதனால் சீனா மத்திய வங்கி அதிக தங்கம் வாங்கி சேமிக்கிறது. அதே போல நாட்டில் தங்கம் இறக்குமதியை அதிகரித்து ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
எதிர்காலத்தில் உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் எந்த நாட்டிடம் அதிக தங்கம் உள்ளதோ அந்த நாட்டின் கை தான் ஓங்கி இருக்கும். எனவே தான் சீனா அதிகமாக தங்கம் வாங்குகிறது. உலக சந்தையில் இருந்து கூடுதல் விலை கொடுத்து கூட தங்கம் வாங்க சீன வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications

