அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பர வரி விதித்து உலக நாடுகளை கலங்கடித்துள்ளார். இந்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி (நேற்று) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் உபரியை கொண்டுள்ள நாடுகளை குறிவைப்பதாக இருக்கிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. மேலும், டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச வர்ததக போரை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பால் வரி ராஜா என்று முத்திரை குத்தப்பட்ட இந்தியா, பரஸ்பர வரி விவகாரத்தில் நேரடியாக பிரச்சினையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரியும், டஜன் கணக்கான பிற நாடுகளுக்கு அதிக வரிகளையும் விதித்தார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிகபட்சமாக சீன இறக்குமதிகளுக்கு 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டிரம்ப் விதித்த 20 சதவீத வரியையும் சேர்த்தால் சீனா பொருட்கள் மீதான மொத்த புதிய வரி 54 சதவீதமாக உயரும். இதனால் அமெரிக்காவுக்கான சீன பொருட்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்த்ததை காட்டிலும் டிரம்ப் அதிக வரி விதித்ததால் இன்று சீன பஙகுச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. மேலும் யுவான் மதிப்பும் தடாலடியாக வீழ்ச்சி கண்டது. சீனாவின் புளூசிப் சிஎஸ்ஐ 300 இன்டெக்ஸ் தொடக்கத்தில் 0.5 சதவீதம் சரிந்தது.
அதேநேரத்தில் ஹாங்காங்கின ஹேங் செங் இன்டெக்ஸ் ஆரம்பத்தில் 1.7 சதவீதம் சரிந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் யுவான் மதிப்பு 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில், டாலருக்கு எதிரான யுவானின் மதிப்பு 7.3ஆக இருந்தது. இதற்கு முன் கடைசியாக பிப்ரவரி 13 அன்று இந்த அளவு காணப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா பொருட்கள் மீதான வரியை உயர்த்தியதோடு மற்றொரு எதிர்பாராத சம்பவத்தையும் செய்துள்ளார். சீனாவிலிருந்து வரி இல்லாத டி மினிமிஸ் என்று அழைக்கப்படும், 800 டாலர் அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பேக்கேஜ்களை அனுப்ப பயன்படுத்தப்படும் வர்த்தக ஒட்டையை அடைப்பதற்கான உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வரும் பொருட்களை உள்ளடக்கியது. இந்த உத்தரவு மே 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications