ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், இது நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவதை ஒரு நல்வாய்ப்பாக குறிப்பிட்ட அவர், இது "ஜிஎஸ்டி சேமிப்பு உத்சவம்" என்றும், இதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் சேமிப்பும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தனது உரையில், ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் விரைவுபடுத்தும், வணிகம் செய்வதை எளிதாக்கும், அதிக முதலீடுகளை ஈர்க்கும், மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். இந்த மாற்றங்கள் ஏழைகள், நடுத்தர மக்கள், புதிய நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் என அனைவருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பழைய வரிச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி : கடந்த 2017-ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று மோடி விவரித்தார். முன்னர், நமது நாட்டில் டஜன் கணக்கான வரிகள் இருந்தன. ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்ப, எண்ணற்ற சோதனை சாவடிகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த நிலை ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு மாறியது. இது வணிகர்களின் செலவுகளைக் குறைத்து, குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகுத்தது.
நடுத்தர வர்க்கத்திற்கு புதிய நம்பிக்கை : கடந்த 16 ஆண்டுகளில், இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறி, ஒரு புதிய நடுத்தர வர்க்கமாக உருவெடுத்துள்ளனர். இந்த புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு தனிப்பட்ட கனவுகளும், விருப்பங்களும் உள்ளன. இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்து ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கு இரட்டை பலன் கிடைத்துள்ளது. வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆகிய இரண்டும் இணைந்து, மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு அழைப்பு : இந்தியாவுக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். சுயசார்பு இந்தியாவின் பாதையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) முக்கியப் பங்காற்ற வேண்டும். ஜிஎஸ்டி குறைப்பானது இந்த துறைக்கு பெரிய அளவில். வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். மேலும், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரித்து, முதலீடுகளுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications