செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் நிறுவனத்தின் பல் பொருள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். இந்த ஆலை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட கிரீன் பீல்ட் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலை 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலையாக இரு பார்க்கப்படுகிறது. இந்த ஆலை அமைப்பதற்காக கோத்ரேஜ் நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

13 மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆலை மூலம் 1110 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெண்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இங்கே வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆலையை திறந்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோத்ரேஜ் உற்பத்தி ஆலையில் 50 சதவீத வேலை வாய்ப்பு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆலை அமைப்பதற்காக அரசுக்கும் கோத்ரேஜ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றும் 2024 ஜனவரி மாதம் இந்த ஆலையை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் தெரிவித்தார்.
13 மாதங்களிலேயே இந்த திட்டம் முடிக்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து அது வெற்றிகரமாக பயன்பாட்டிற்கு வரும் வரை திராவிட மாடல் அரசு எவ்வளவு பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார். தமிழ்நாடு மாநிலம் பொருளாதார ரீதியாக மட்டும் வளர்ச்சி அடைவது கிடையாது அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும் சமூக நீதியை உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.
செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் கோத்ரேஜ் நிறுவனத்திற்கான சோப்புகள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் ,கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. முதலமைச்சர் இந்த ஆலையை திறந்து வைத்தவுடன் முதன் முறையாக சிந்தால் சோப் பார் உற்பத்தி செய்யப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications