தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. மாமல்லபுரத்தில் இருக்கும் பாரம்பரிய சிற்பங்களின் அழகை ரசிப்பதற்காகவே இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் எனப்படும் மகாபலிபுரம் செயல்படுகிறது. இது வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய நகரமாகவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. பண்டைய கால நகரங்கள், சிற்பங்கள், கோயில்கள் மற்றும் கலை நுட்பங்களை பார்வையிடுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தருகிறார்கள்.

மாமல்லபுரத்தில் ஐந்து முக்கியமான இடங்கள் உள்ளன. அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில்கள், ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டும் அல்லது ஆட்டோ உள்ளிட்டவற்றை நாட வேண்டி இருக்கும். இந்நிலையில் தான் ரோப் கார் சேவை கொண்டு வந்தால் சுற்றுலா பயணிகள் சிரமம் இல்லாமல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும் என அரசு திட்டமிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் ரோப் கார் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து முதல்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் கழகம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் ஆகிய இரண்டும் இணைந்துள்ளன. மாமல்லபுரத்தில் ரோப் கார் சேவையை கொண்டு வருவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை ஒரு ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கின்றன.
இந்த ஆய்வு நிறுவனம் மாமல்லபுரத்தில் ரோப் கார் சேவை அமைக்க முடியுமா அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் ஆய்வு செய்யும். இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அரசு திட்டப்படி மாமல்லபுரத்தில் ரோப் கார் சேவை வந்துவிட்டால் மாமல்லபுரத்தின் முக்கியமான ஐந்து தளங்களிலும் நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு ரோப் கார் வழியாகவே சென்று விட முடியும்.
வானத்திலிருந்து படியே மாமல்லபுரத்தின் அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த நிறுவனம் மூன்று மாதங்களில் தன்னுடைய அறிக்கையை வழங்கும் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு ரோப் கார் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரோப் கார் சேவை மூலம் மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications