சென்னை: நம் நாட்டவர்கள் பொருட்களின் விலை பார்த்து வாங்கிய காலம் மலையேறி விட்டது. ஒரு பொருள் பிடித்து இருந்தால் விலை பற்றி கவலைப்படாமல் வாங்க தொடங்கி விட்டனர்.

குறைந்த விலை கார்கள், டி.வி.கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன்கள் மீது நுகர்வோருக்கு முன்பு இருந்த ஈர்ப்பு இப்போது இல்லை. இந்திய நுகர்வோர் இப்போது காஸ்ட்லியான பொருட்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
இது நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரித்ததில், எளிதான கடன் வசதி ஒரு பெரிய பங்கினை கொண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் என்ட்ரி நிலை குட்டி கார்கள், குறைந்த விலை டி.வி.கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் குறைந்தவிலை செல்போன்களின் சந்தையின் பங்கு மொத்த விற்பனையில் பாதியாக குறைந்துவிட்டதாம். இது இந்திய நுகர்வோர் அதிகளவில் விலையுயர்ந்த பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
முன்னணி ரீடெயில் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், செல்போன், லேப்டாப், ஏ.சி., தொலைக்காட்சி அல்லது கார் போன்ற ஏதாவது ஒரு பொருளை மலிவு விலையில் நல்ல பிராண்டாக வாங்க நுகர்வோர் ஷோரூம்களுக்கு வருகிறார்கள். ஆனால் எளிதான இ.எம்.ஐ. வசதி மற்றும் தரமான தயாரிப்பு போன்றவற்றால் மனம் மாறி விலையுயர்ந்த பொருட்களை வாங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
2021ம் ஆண்டில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களின் பங்கு 35 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில் 30 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில், 2021ம் ஆண்டில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களின் பங்கு வெறும் 8 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டில் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார் பிரிவு மொத்த கார் சந்தையில் ஒரு சதவீதத்துக்கு குறைவாக சுருங்கி விட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை, மொத்த கார் விற்பனையில் 87.5 சதவீத பங்கினை கொண்டு இருந்த ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார் பிரிவின், இப்போதைய சந்தை பங்கு எவ்வளவு தெரியுமா. 54 சதவீதம்தான். அதாவது 46 சதவீதம் பேர் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலையுள்ள கார்களை வாங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications