உலக அளவில் தங்கம் வெள்ளிக்கு நிகரான வளர்ச்சியை பெற்று வருகிறது காப்பர் எனப்படும் செம்பு. இதனை தான் அடுத்த தங்கம், என அழைக்கிறார்கள். வெள்ளியை போலவே செம்பும் தொழில் துறை ரீதியிலான தேவையை கொண்டுள்ளது.
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விலை உயர்வை கண்டு ஆச்சரியப்படக்கூடிய இந்தியர்கள் அடுத்த தங்கமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய செம்பினை கவனிக்க தவறி விட்டனர். ஏனெனில் செம்பு கூடிய விரைவில் பெரிய அளவில் வளர்ச்சி அடைவது உறுதி என்பதே நிபுணர்களின் கருத்து. ஏனெனில் செம்பின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து இருக்கிறது. செம்பிற்கான தேவையும் உயர்ந்திருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த தரவு மையங்கள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின் கட்டுமான அமைப்புகள் என இவை அனைத்திலுமே காப்பர் எனப்படும் செம்பின் பயன்பாடு மிக முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் செம்பின் விலை 60 சதவீதத்திற்கும் மேல் உயர்வு கண்டது.2026ஆம் ஆண்டிலும் வேகமாக இதன் மதிப்பு உயர்கிறது.
இந்தியாவில் நாம் தங்கம், வெள்ளி உலோகங்களை நேரடியாக வாங்குவதற்கு மாற்றாக ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் காண்கிறோம். ஆனால் செம்பிற்கு அப்படி ஒரு வாய்ப்பில்லை. வேகமாக வளர்ந்து வரக்கூடிய உலோகமான செம்பில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கென ஒருங்கிணைந்த ஈடிஎஃப் போன்ற திட்டங்கள் கிடையாது. இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய நிறுவனங்களின் பங்குகளை வேண்டுமானால் நாம் வாங்கலாம்.
இந்நிலையில் தான் கூடிய விரைவில் இந்தியாவில் காப்பர் ஈடிஎஃப் திட்டங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிசினஸ் டுடே இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. உலக சந்தையில் சப்ளை டிமாண்ட் சமநிலை குறைந்ததன் காரணமாகவும், சீனா அதிகமாக வாங்குவதாலும் செம்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே தான் தங்கம், வெள்ளிக்கு எப்படி தனித்தனியாக ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கின்றனவோ அதேபோல செம்பினை பிரதானமாக கொண்டு ஈடிஎஃப் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஆலோசனை நடத்தி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது.
தற்போது இந்திய முதலீட்டாளர்கள் செம்பில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. mcx வர்த்தகத்தில் செம்புக்கான பியூச்சர்ஸ் இருந்தாலும் அதில் முதலீடு செய்வது மிகவும் அபாயகரமானது. இல்லை என்றால் ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற நிறுவனங்களில் தான் நம் முதலீடு செய்ய முடியும். இந்த சூழலில் தான் இந்திய முதலீட்டாளர்களுக்கு செம்பு சந்தையில் நிதி முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வாய்ப்பாக ஈடிஎஃப் திட்டங்கள் அமையும்.
எனவே சிறிய முதலீட்டாளர்களும் நேரடியாக செம்பில் முதலீடு செய்து லாபம் பெற முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த ஈடிஎஃப் திட்டங்கள் இருக்கும் நிலையில் அதை பின்பற்றி நீண்ட கால முதலீட்டு கருவியாக இந்தியாவில் செம்புக்கான ஈடிஎஃப் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
செபி உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு முறையான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் இந்தியாவில் செம்பு முதலீட்டுக்கான ஈடிஎஃப் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும். அப்படி வந்தால் பெரும்பாலானவர்கள் தங்கம், வெள்ளியை விடுத்து செம்பு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.இந்தியாவில் 2007இல் இருந்து தங்கத்துக்கான கோல்டு ஈடிஎஃப் திட்டங்களும், 2022இல் இருந்து வெள்ளிக்கான சில்வர் ஈடிஎஃப் திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications