இஸ்ரேல்-ஹமாஸ் போர் எண்ணெய் பிராந்தியத்தில் பெரிய மோதலாக விரிவடையும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 7ம் தேதி அதிரடியாக பல முனை தாக்குதல் நடத்தினர். இதில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் வெளிநாட்டவர் உள்பட 212 பேரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்து சென்றனர். இதனையடுத்து காஸா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல்-காஸா போர் ஆரம்பித்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மெல்ல உயர தொடங்கியது. போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளை பாதிக்கும் என்ற அச்சம் காரணமாக விலை உயர தொடங்கியது.

காஸாவில் ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த சிரியா மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமாவதை தடுக்கும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள் மேற்கொண்டு வரும் இராஜந்திர முயற்சிகள் தீவிரமடைந்தது. இது கச்சா எண்ணெய் சப்ளை குறித்த முதலீட்டாளர்களின் கவலையை தளர்த்தியது.
இதனால் நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்துக்கு மேல் குறைந்தது. ஆனால் இன்று ஆசியாவின் வர்த்தக தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியத்தில் பெரிய மோதலாக விரிவடையும், இது சாத்தியமான சப்ளை இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் அச்சத்துடன் இருப்பதே இதற்கு காரணம். இன்று காலையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ப்யூச்சர் விலை (பேரலுக்கு) 0.8 சதவீதம் உயர்ந்து 90.53 டாலராகவும், West Texas Intermediate கச்சா எண்ணெய் ப்யூச்சர் விலை 71 செண்ட் உயர்ந்து 86.20 டாலராகவும் இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து நொமுரா செக்யூரிட்டிஸின் பொருளாதார நிபுணர் யுகி தகாஷிமா கூறுகையில், கடந்த 2 வர்த்தக தினங்களில் சரிவுக்கு பிறகு சந்தை சரிசெய்தல் மற்றும் மத்திய கிழக்கில் சாத்தியமான சப்ளை இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் -காஸா நிலவரம், ஒபெக் உற்பத்தி மற்றும் சீனாவின் தேவை மீட்சியின் வேகம் ஆகியற்றை பொறுத்து West Texas Intermediate கச்சா எண்ணெய் விலை சிறிது காலத்துக்கு 80 முதல் 90 டாலர் வரம்புக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு பெரிய அளவிலான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனென்றால் கச்சா எண்ணெய்க்காக நம் நாடு அதிகம் செலவிடுகிறது. நமது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications