பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகள் இன்று சிறுநகரங்களில் கூட விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி விட்டது. மெக்டொனால்டு அல்லது கே.எஃப்.சி. போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்த பிறகு தான் பீட்சா மற்றும் பர்கர் போன்ற உணவுகளை நம்ம மக்கள் சாப்பிட ஆரம்பித்து இருப்பார்கள் என்ற தானே நீங்க நினைச்சிருப்பீங்க?, அப்படித்தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன்.
ஆனால் அந்த நிறுவனங்கள் எல்லாம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பீட்சா, பர்கர், ஹாட் சாக்லேட் மற்றும் 21 சுவையில் ஐஸ்க்ரீம் போன்றவற்றை நம் மக்களுக்கு அறிமுகம் செய்து சுவைக்க செய்து விட்டது உள்நாட்டு நிறுவனமான நிருலாஸ்.

நிருலாஸ் நிறுவனத்தின் வரலாறு 1934ல் டெல்லியில் இருந்து தொடங்குகிறது. டெல்லியின் கன்னாட் பிளேஸில் ஒரு குடும்ப ஹோட்டல் மற்றும் உணவகமாக திறக்கப்பட்டது. 1942ல் சகோதரர்களான லட்சுமி சந்த் மற்றும் நதன் நிருலா அந்த பகுதியில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கினர்.
அதில் இந்திய மற்றும் கான்டினென்டல் உணவகமாக நிருலாஸ் கார்னர் ஹவுஸை திறந்தனர். திறந்த சில நாட்களிலேயே பிரபலமாகி வாடிக்கையாளர்களால் ஹோட்டல் நிரம்பி வழிந்தது. மேஜிக் ஷோக்கள், பிளமெங்கோ நடனங்கள் மற்றும் காபரே நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றை முதல் முதலாக அந்நகரத்துக்கு கொண்டு வந்ததால் அந்த உணவகத்தின் பெயர் பரவியது.
இந்த சூழ்நிலையில் 1947ல் இந்தியா சுதந்திர அடைந்தபோது, உணவகத்தின் நிலைமை தலைகீழாக மாறியது, வாடிக்கையாளர்கள் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து உணவகத்தை மூடி விட்டு, அதே இடத்தில் 3 கடைகளை திறக்க நிருலா குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதில் முதலாவது இந்தியர்களால் நடத்தப்படும் முதல் சீன உணவகம், ஒரு கபே மற்றும் பிரெஞ்சு பிஸ்ட்ரோ ஆகியவை அடங்கும். இதில் சீன உணவகம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்களின் குடும்பம் புதிய முயற்சிகளை தொடர்ந்தது. அருகில் உள்ள பகுதிகளில் மேலும் பல சிறப்பு உணவகங்களை திறந்தனர்.
தீபக் நிருலா மற்றும் அவரது உறவினரான லலித் நிருலாவின் நிர்வாகத்தின் கீழ், நிருலாஸ் புதிய உணவுகளை அறிமுகம் செய்தது. நடுத்தர வர்க்க இந்திய சமூகத்திற்கு குறைந்த விலையில் ஐஸ்கிரீம், பீட்சா, பர்கர்கள் மற்றும் குளிர்பானங்களின் சுவைகளை அறிமுகப்படுத்தினர்.
நம் நாட்டை சேர்ந்த முதல் துரித உணவு சங்கிலித்தொடர் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நிருலாஸ் நிறுவனர் தீபக் நிருலா தி டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
நிருலாஸ் நிறுவனம் பல இந்திய நகரங்களில் 85 விற்பனை நிலையங்களை திறந்தது. நிருலா குடும்பம் 2006ல் மலேசியாவில் உள்ள நவிஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்துக்கு நிருலாஸ் நிறுவனத்தை விற்று விட்டது. 2022ல் தீபக் நிருலா காலமானார்.


Click it and Unblock the Notifications