அமெரிக்க டாலர் உலகிலேயே வலிமையான ஒரு நாணயம். கச்சா எண்ணெய், தங்கம் என நம் பெரும்பாலான வெளிநாட்டு வர்த்தகம் இறக்குமதி, ஏற்றுமதி எல்லாமே டாலரில் தான் நடக்கிறது. அதாவது நாம் ரூபாயை கொடுத்து டாலர் வாங்கி அதில் பொருட்களை வாங்க வேண்டும். இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு நாடும் உலக சந்தையில் டாலரை தான் பயன்படுத்த வேண்டும்.
உலகின் அசைக்க முடியாத நாணயமாக இருக்கும் டாலரையே ஆட்டு விக்க வந்திருக்கிறது தங்கம். அண்மையில் Deutsche Bank Research Institute வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வு அறிக்கை சாமானிய மக்களாகிய நாம் நம்முடைய எதிர்கால தேவைக்கு எதை வாங்கி வைக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க டாலரை வேறு எந்த ஒரு நாட்டின் நாணயத்தாலும் அல்லது தங்கம், வெள்ளி போன்ற எந்த ஒரு உலோகத்தாலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க டாலரே ஆட்டம் கண்டு இருக்கிறது.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு அமெரிக்க டாலரை வாங்கி வைத்திருந்த காலம் மாறி அமெரிக்க டாலர் போனால் போகட்டும் தங்கத்தை வாங்கி வையுங்கள் என்ற மனநிலைக்கு மாறியிருக்கின்றன. அந்த வகையில் உலக அளவில் கடந்த நான்கு ஆண்டுகளிலேயே மத்திய வங்கிகள் வசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்துவிட்டது, அதே வேளையில் மத்திய வங்கிகள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் அளவு 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அதாவது இதற்கு முன்பு மத்திய வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தங்கம் வாங்குவது , விற்பனை செய்வது , தங்கத்தை பணமாக மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் தற்போது அரசியல் சூழலை காரணமாக கொண்டு மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் நிலை உண்டாகி இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதுதான் பல்வேறு நாடுகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதாவது தங்கம் உங்கள் கையில் இருந்தால் யாராலும் அந்த சொத்தை உங்களிடம் இருந்து பறிக்க முடியாது இதுவே அமெரிக்க டாலர் என்றால் திடீரென அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் அந்த டாலரை உங்களால் பயன்படுத்தவே முடியாது. அந்த வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நாடுகளின் வங்கிகள் தற்போது அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ,மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் தற்போது உலக சந்தையில் அதிகமாக தங்கம் வாங்கக்கூடிய நாடுகள்.
இதற்கு காரணம் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தாலும் நம் கைவசம் இருக்க கூடிய தங்கம் நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற ஒரு நம்பிக்கை தான். தற்போது வளர்ந்த நாடுகள் வசம் இருக்கக்கூடிய சேமிப்பில் 34 சதவீதம் தங்கமாகவும் வளரும் நாடுகளிடம் இருக்கக்கூடிய தங்கத்தின் அளவு 16 சதவீதமாகவும் இருக்கிறது. இனி வளரும் நாடுகள் இந்த 16 சதவீதத்தை 40 சதவீதமாக உயர்த்துவதற்கு முற்படும்.
அப்படி பார்க்கும்போது உலக சந்தையில் இந்த நாடுகள் அதிகமாக தங்கம் வாங்கும் எனவே தங்கத்தின் விலை உயரும் என அந்த அறிக்கை அடித்து கூறுகிறது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 டாலர்கள் என்ற அளவை எட்டும் என இந்த ஆய்வறிக்கை அடித்துக் கூறுகிறது. ஒரு அவன்ஸ் தங்கம் என்பது 28. 34 கிராம் தங்கம் ஆகும்.
இன்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உடைய 4500 டாலர். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8000 டாலராக உயர்கிறது என்றால் கிட்டதட்ட 90 சதவீதத்திற்கும் மேல் தங்கத்தின் விலை உயரும். அதை அப்படியே இந்திய சந்தையில் நாம் அப்ளை செய்து பார்த்தால் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 1.18 லட்சம் ரூபாய் இதில் 90 சதவீதம் உயர்கிறது என்றால் ஒரு சவரன் தங்கம் விலை 2 லட்சம் ரூபாயை கடக்கும். அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் 2 லட்சத்தையும் ஒரு கிராம் தங்கம் 30,000 ரூபாய் என்ற அளவை எட்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


