தங்கத்திற்கு எப்போதும் அதிகப்படியான மதிப்பும் இருக்கும் காரணத்தாலேயே பெண்கள் நகையாகவும், ஆண்கள் கட்டிகளாகவும், தங்கக் காசுகளாகவும், பத்திரங்களாகவும் வாங்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்வது சரியான தேர்வாக இருக்காது எனப் பலரும் கூறியிருப்பதைக் கேட்டு இருப்போம்.
ஆனால் பொருளாதாரச் சூழ்நிலை தடுமாற்றம் அடைந்த காரணத்தால் தங்கம் முக்கிய முதலீடாக மாறியதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் பெரும் லாபத்தைத் தங்க முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது. இதேவேளையில் திருமணத்திற்காக, சேமிப்பிற்காகத் தற்போது தங்கம் வாங்க நினைப்போர் அனைவருக்கும் இது கண்ணீர் வரவழைக்கிறது.

தந்தேராஸ் பண்டிகை நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் காரணத்தால் ஒட்டு மொத்த வட இந்திய மக்களும் நகைக் கடைகளிலும், ஆன்லைன் வாயிலாகவும் தங்கத்தை வாங்க தயாராக உள்ளது. தந்தேராஸ் பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் செல்வம் பெரும் என்பது மக்கள் மத்தியில் முக்கிய நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் தந்தேராஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை (நவ.10) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாமா என்றால் இல்லை, தந்தேராஸ் கொண்டாடுவதற்கான நல்ல நேரம் நவம்பர் 10ம் தேதி மதியம் 12.35 மணிக்குத் தொடங்கி நவம்பர் 11ம் தேதி மதியம் 1.57 மணிக்கு முடிவடையும்.
நவம்பர் 10ம் தேதி தந்தேராஸ் பூஜைக்கான முகூர்த்த நேரம் மாலை 5.47 முதல் 7.43 மணி வரை என்று கூறப்பட்டுள்ளது, இந்தக் காலகட்டத்தில் தங்கம் வாங்குவது சிறந்தாக இருக்கும். பொதுவாக வட இந்தியாவில் திருமணங்கள் கூட மாலையில் நடைபெறும், காரணம் லட்சுமி வரும் நேரமாக இக்காலகட்டத்தைக் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டுத் தந்தேராஸ் பண்டிகையின் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 50,062 ரூபாயாக இருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி 10 கிராம் தங்கம் விலை 61,250 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு வருடத்தில் 20.10 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் குறைந்து 56100 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் குறைந்து 61,250 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 44,920 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications