தங்கம் விலை சமீபகாலமாக அதிகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட தங்க விலையும் இன்றைய தினம் விற்பனை செய்யப்படும் விலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாற்றத்தை நீங்களே உணரலாம்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக வைரத்தின் விலைகள் தேக்கமடைந்துள்ளன. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் பல குடும்பங்கள் இருக்கையில் வைரமும் ஒரு முதலீடாக கருதக்கூடிய பொருளா? இவற்றை முதலீட்டுக்காக வாங்கலாமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

டயமண்ட் ஸ்டாண்டர்ட் இன்டெக்ஸின் 22 வருட மந்தமான செயல்திறன் காரணமாக வைர விலையில் பெரிதாக மாற்றமில்லை. இந்த விஷயம் புத்திசாலித்தனமாக, முதலீட்டை செய்பவர்களுக்கு ஏற்கனவே தெரியும். முதலீட்டை பொருத்தவரையில் நீங்கள் வாங்கும் போது உள்ள விலையை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அதை மறு விற்பனை செய்யும் போது நீங்கள் பெறக்கூடிய விலை ஏற்றதாக உள்ளதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வைரங்களின் மதிப்புக்கும் அதை உண்மையாக விற்பனை செய்யும் போது கிடைக்கும் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இது தற்செயலாக நடந்ததல்ல மாறாக திட்டமிட்ட செயல் தான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் 1870-களில் தென்னாப்பிரிக்காவில் பெருமளவிலான வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக இருப்பின் காரணமாக விநியோகமும் அதிகரித்தது. இது விலை குறைய வழி வகுத்தது. பொதுவாக எந்த ஒரு பொருளும் அதிக அளவில் இருக்கும் போது அவற்றின் விலை சற்று குறைவாக இருப்பது இயல்புதான். அதே நிலை தான் அன்றைய காலத்தில் வைரத்திற்கும் ஏற்பட்டது.
இதனால் வைரங்களின் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக டி பீர்ஸ் என்ற நிறுவனம் உருவாகி, விநியோகத்தையும் விலையையும் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க தொடங்கியது.
1938-ஆம் ஆண்டில் டி பீர்ஸ் நிறுவனரின் மகனான ஹாரி ஓப்பன்ஹைமர் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான ஒரு மார்கெட்டிங் முயற்சியை தொடங்கி வைரத்தை மார்க்கெட்டிங் செய்தார். இதன் மூலம் வெறும் அழகான கற்களாக மட்டுமல்லாமல், முக்கிய வர்த்தக பொருளாகவும் மாறியது.
இவருடைய புதுமையான மார்க்கெட்டிங் யுத்தியால் வைரங்கள் விற்பனையானது மட்டுமல்லாமல், வைரங்களை வாங்குவோர் அதை ஒருபோதும் விற்கக் கூடாது என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவத் தொடங்கியது. டி பீர்ஸ் வைர சந்தையை முறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வைரத்தின் இரண்டாம் நிலை சந்தையை உருவாவாதை தடுத்து நிறுத்தவும் இந்த யுக்தி உதவியது. ஏனெனில் யாரும் வைரங்களை விற்கவில்லை என்றால் மறு விற்பனையின் போது அவற்றின் விலை குறைவாக இருக்கும் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
பொதுவாக வைரங்கள் அவற்றின் கட், நிறம், சான்றிதழ் போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வைரத்தின் மதிப்பை குறைக்கலாம் அல்லது கூட்டலாம்.
அதோடு தற்போது ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களும் வந்துவிட்டன. அவை பார்ப்பதற்கு உண்மையான வைரங்கள் போலவே காட்சியளிக்கின்றன. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் பாரம்பரிய வைர சந்தையை பாதித்தது. இருப்பினும் இது போன்ற மார்க்கெட்டிங் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இது போன்ற வைரங்கள் உதவின.
இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடம் என்னவென்றால் வைர விலைகள் உயரவில்லை என்பது மட்டுமல்லாமல், சில்லறை முதலீட்டாளர்களுக்கு வைரம் ஏற்ற தேர்வு இல்லை என்பதும் தான். வைரசந்தையின் முழு அமைப்பும் அதன் விநியோகத்திலிருந்து தெளிவற்ற விலை நிர்ணயம் வரை முதலீட்டாளர்களுக்கு சாதகமற்றதாக உள்ளன.
உண்மையில் முதலீடுகள் வருமானம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதிலிருந்து என்னதான் ஆடம்பர பொருளாக நாம் வைரங்களை வாங்கினாலும் அல்லது புத்திசாலித்தனமாக மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்தாலும் அவை செல்வத்தை உருவாக்கும் கருவியாக மாற முடியாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications