மிடில் கிளாஸ் மக்களின் முக்கியமான சேமிப்பாக இருக்கும் தங்கம் வாங்குவதற்கான பொன்னான நாள் இந்த தந்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகை. வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த தந்தேரஸ் நாளிலும், தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போதும் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோட்டாக் நியோ இந்த தந்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது தங்கம், வெள்ளி வாங்குவது மூலம் கடந்த 21 ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதைக் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.

தங்கமும், வெள்ளியும் எப்போதும் நீண்ட கால முதலீடாகப் பார்க்கப்படும் வேளையில் 2005 முதல் 2025 வரையிலான 21 ஆண்டு காலாக்கட்டத்தில் ஒவ்வொரு வருடத்தின் தீபாவளி பண்டிகையின் போது 1 கிராம் தங்கம் வாங்கியிருந்தால் இன்று உங்கள் கையில் 21 கிராம் இருந்திருக்கும்.
21 வருடத்தில் 21 கிராம் தங்கத்தை வாங்குவதற்கு நீங்கள் 76,246 ரூபாய் மட்டுமே செலவு செய்திருப்பீர்கள், ஆனால் இன்று அதன் மதிப்பு 3,02,400 ரூபாயாக உயர்ந்திருக்கும். கிட்டதட்ட 2.26 லட்சம் ரூபாய் லாபம், முதலீடு செய்யப்பட்ட தொகையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 4 மடங்கு லாபம். 2005ஆம் ஆண்டில் 1 கிராம் தங்கம் விலை 700 ரூபாய், இன்று 14,400 ரூபாய்.
இதேபோல் நீங்கள் தந்தேரஸ் அல்லது தீபாவளிக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கிராம் வெள்ளி வாங்கியிருந்தால் தற்போது உங்கள் கையில் 2.1 கிலோ தங்கம் இருந்திருக்கும், இந்த 2 கிலோ தங்கத்தை வாங்க கடந்த 21 வருடத்தில் 1,05,329 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள், ஆனால் இன்றைய விலையில் இதன் மதிப்பு 3,94,800 ரூபாயாகும்.
இதன் மூலம் 2.89 லட்சம் லாபம் கிடைத்திருக்கும், அதாவது சின்ன கல்லு பெத்த லாபம். 2005ல் 100 கிராம் வெள்ளி விலை வெறும் 1160 ரூபாய், தற்போது 20,000 ரூபாய்.
கோட்டாக் நியோ மதிப்பீட்டின் படி தங்கம் வருடாந்திர அடிப்படையில் 15.4 சதவீதமும், வெள்ளி 13.8 சதவீத லாபத்தையும் கொடுத்துள்ளது. இந்த லாப அளவீடு என்பது கட்டாயம் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு, வங்கி வைப்பு நிதி, பிபிஎப், ஈபிஎப் முதலீடுகளைக் காட்டிலும் அதிகமாகும்.
2025ஆம் ஆண்டில் பிற்பகுதியிலும், 2026ஆம் ஆண்டில் முற்பகுதியிலும் பதிவான விலை உயர்வு தான் தற்போது தங்கம், வெள்ளி முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
