கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி விட்டன. எலக்ட்ரிக் வாகனங்களால் மாசு ஏற்படாது, எரிபொருள் செலவினம் குறையும் என்பதால் மக்களும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர்.
இதனால் டாடா, எம்.ஜி. உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகின்றன. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா இந்த ஆண்டு தொடக்கத்தில், மஹிந்திரா XUV 400 என்ற தனது முதல் எலக்ட்ரிக் XUV காரை அறிமுகம் செய்தது.

இதேவேளையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிரடியான ஆஃபர்களும் அள்ளி வீசப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தில் கார் விற்பனையாளர்கள் முதல் மளிகை கடை வரையில் அனைத்து தரப்பினரும் அதிகப்படியான வர்த்தகத்தை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
மஹிந்திரா XUV 400 எலக்ட்ரிக் SUV காரானது 39.4 கிலோ வாட் பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. காரின் என்ஜின் 310 என்.எம். டார்க் திறன் வழங்குவதால், XUV 8.3 வினாடிகளில் 100 கி.மீட்டர் வேகத்தை எட்ட உதவுகிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 456 கி.மீட்டர் வரை பயணிக்கலாம் என்று மஹிந்திரா நிறுவனம் சொல்கிறது.
மஹிந்திரா XUV 400 எலக்ட்ரிக் SUV காரில் Android Auto மற்றும் Apple CarPlayக்கான பிரத்யேக பயன்பாட்டுடன் கூடிய 17.78 செ.மீ டச் ஸ்கிரீன் உள்ளது. இந்த காரில் சாடின் காப்பர் செருகிகளுடன் கூடிய எலக்ட்ரிக் டெயில் விளக்குகளை கொண்டுள்ளது. காரில் ஒரு பெரிய எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. ஆறு ஏர்பேக்குகள் உள்ளன. ஒவ்வொரு சக்கரத்திலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ரியர் வியூ கேமரா உள்பட பல சிறப்பம்சங்கள் இந்த காரில் உள்ளன.
தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், மஹிந்திரா XUV 400 காருக்கு ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறார்கள். தீபாவளியை முன்னிட்டு டீலர்கள் டாப் ஸ்பெக் EL வேரியண்ட்டுக்கு ரூ.3.5 லட்சம் வரையிலும், ESC உடன் கூடிய EL வேரியண்ட்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், குறைந்த ஸ்பெக் EL வேரியண்ட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்குகிறார்கள்.
டாடாவின் நெக்ஸான் EV மற்றும் எம்.ஜி இசட்எஸ் EV ஆகியவற்றுக்கு விற்பனையில் மஹிந்திரா XUV 400 கடும் போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications