கர்நாடகத்தின் பிரபல உணவுகளுள் ரவா இட்லி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
அது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த நேரம். பர்மா மீது ஜப்பான் தாக்குதலைத் தொடங்கியது. உலகிலேயே அதிக அரிசியை உற்பத்தி செய்யும் பர்மா தாக்குதலுக்கு ஆளானதால் அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் அரிசியை நம்பியிருக்கும் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன.

அப்போது பெங்களூரில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூரின் பிரபல உணவகமான மாவெல்லி டிபன் ரூம் எனப்படும் எம்டிஆர் உணவகத்தின் செஃப் ரவையை ஊறவைத்து இட்லியாக சமைத்தார். அதில் தயிரும் கலந்திருந்ததால் ருசி அருமையாக இருந்தது.
இதனால் இட்லி, தோசைக்கு மாற்றாக மக்கள் ரவா இட்லியை விரும்பிச் சாப்பிட்டனர். இதனால் பெங்களூரில் ஏற்பட்ட அரிசி பஞ்சமும் தீர்ந்தது.
எம்டிஆர் உணவகத்தின் தலைமை சமையல் கலைஞர் யக்நப்பா ரவையுடன் தயிர், கறிவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை கலந்து சூப்பர் ரவா இட்லியை செய்தார்.
உலகப்போர் முடிந்த பிறகும் ரவா இட்லியின் மவுசு குறையவில்லை. இதற்கு சட்னி மற்றும் குருமா நல்ல பொருத்தமாக இருந்தது. ரவா இட்லி மட்டும் யக்னப்பாவின் படைப்பல்ல. முதன் முதலில் சந்திரஹாரா இனிப்பையும் அவர்தான் தயாரித்தார். மைதா மாவை அடுக்கடுக்காக நன்றாகத் தேய்த்து நடுவில் கோவாவை வைத்து மடக்கி எடுத்து அதில் இனிப்புப் பாகை ஊற்றி லேசாக ஊறவைத்து மேலாக பாதாம் பருப்பை மெல்லிசாக தூவி மையமாக ஒரு கிராம்பை குத்தி வைத்தால் சந்திரஹாரா ரெடி!
சந்திரஹாரா ஒரு பிரஞ்சு இனிப்பை அடிப்படையாக வைத்து யக்னப்பா தயாரித்திருந்தார்.
வெகு சீக்கிரமே கர்நாடகாவின் ஸ்பெஷாலிட்டியாக ரவா இட்லியும் சந்திரஹாராவும் மாறிவிட்டன.
இப்போது ரவா இட்லியும் சந்திரஹாராவும் கர்நாடக மாநிலத்தின் எல்லை தாண்டி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கும் வந்துவிட்டது. அங்கும் மக்களின் இதயத்தை ரவா இட்லியும், சந்திரஹாராவும் கவர்ந்து விட்டன.
தமிழ்நாட்டில் சந்திரஹாரா புதிய வடிவத்தை எடுத்தது. சந்திரஹாராவுக்கு தமிழ்நாட்டில் சந்திரகலா என்று பெயர். ஏனென்றால் அந்த இனிப்பை ஒரு மாற்றத்துக்காக பிறை வடிவில் மடித்து தயாரித்ததால் சந்திரகலா ஆனது.
யக்னப்பா ரவா இட்லி, சந்திரஹாரா மட்டும் அல்லாமல் அமெரிக்க ஐஸ்கிரீமுடன் பிரஞ்சு பழ கலவையுடன் புதிய டெசர்ட் கொண்டு வந்தார், இது இன்னும் பரிமாறப்படுகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications