சென்னை: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் இந்த ஆசையை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் எச்சரிக்கையாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்ற விபரத்தை பற்றி பார்ப்போம்.
அந்தேரியைச் சேர்ந்த 54 வயதான ஆயுர்வேத பெண் மருத்துவர், பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி ரூ. 7 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த மோசடியில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ராஜிவ் சர்மா டிரேட் குரூப் என்ற நிறுவனத்தை ஆதரித்து பேசுவது போன்ற (deepfake) வீடியோ ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். இந்த போலி வீடியோவைக் கண்டு நம்பிய டாக்டர் கே.கே.எச். பாட்டீல், மே 28 முதல் ஜூன் 10 வரை, 16 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.7.1 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். உயர் லாபம் மற்றும் அம்பானியின் போலி வீடியோ ஆகியவற்றால் தொடர்ந்து அந்தப் பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், பின்னர் வர்த்தக இணையதளத்தில் காட்டப்பட்ட ரூ.30 லட்சம் லாபத்தை திரும்பப் பெற முயன்ற போதுதான் அவர் மோசடி செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்தது.

போலீஸ் விசாரணை: ஏமாற்றிய அந்த அடையாளம் தெரியாத நபரின் மீது ஆழ் மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அடையாளத் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக ஐபிசி மற்றும் ஐடி சட்ட பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அந்த போலியான வீடியோவை உருவாக்குவதற்காக டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இந்தப் போலியான வீடியோவை பார்த்துள்ளார். அதனை நம்பி பணத்தை முதலீடு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது சம்பவத்தில் நொய்டாவை சேர்ந்த சந்திப் குமார் என்பவர் வீட்டில் இருந்து வேலை தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்களிடம் சிக்கி ரூ.20.54 லட்சத்தை இழந்துள்ளார். ஜனவரி மாதம் சந்திப் குமாருக்கு வேலை தருவதாக ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகி இருக்கிறது. அதன் பின் சந்திப் குமார் 200 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு டெலிகிராம் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் முதலீட்டில் அவரை ஈடுபட வைக்கும் நடவடிக்கைகளை மோசடிக்காரர்கள் தொடங்கியுள்ளனர். அதனை நம்பி சந்திப் குமாரும் முதலில் ரூ. 50,000 ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திரும்பவும் எடுக்க முடியவில்லை. கூடுதலாக ரூ. 5 லட்சம் வரை செலுத்துமாறு கேட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை சந்தீப் குமார் உணர்ந்துள்ளார்.
நொய்டாவில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவுகள் 420, 506 மற்றும் ஐடி சட்ட விதிகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. "நான் முதலீடு செய்த ரூ. 20,54,464 ரூபாயை என்னால் திரும்பப் பெற முடியவில்லை" என்று குமார் தனது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்
நீங்களும் இது போன்ற சிக்கல்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் மூலம் வேலை தருவதாக யாரேனும் கூறினால் அவர்களை நம்பாதீர்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரியாமல் முதலீடு செய்யாதீர்கள். நாம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முதலீடு செய்வதன் காரணமாக தான் நாம் நமது பணத்தை இழக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications