மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை கைவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு தங்க நகைகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தங்க பத்திரத் திட்டம். இதன்படி இந்தியாவை சேர்ந்த தனி நபர்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் ஆகியவை டிஜிட்டல் முறையிலான இத்தகைய தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.
நாம் செலுத்தக்கூடிய தொகைக்கு ஏற்ற அளவிலான தங்கம் கிராம்களில் பதிவு செய்து கொள்ளப்படுகிறது. ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் இதில் ஒதுக்கீடு செய்யப்படும். தங்க பத்திரத்தின் காலம் என்பது எட்டு ஆண்டுகள் ஆகும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்றைய தேதியில் நாம் பதிவு செய்த தங்கத்திற்கு நிகரான விலையை நமக்கு பணமாக கொடுத்து விடுவார்கள். அதுமட்டுமின்றி நாம் செலுத்திய தொகைக்கு ஆண்டுதோறும் 2.5 சதவிகிதம் வட்டியும் சேர்த்து கிடைக்கிறது.

இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் தங்க நகைக்கு மாற்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் பெரும்பாலும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை நிறுத்தப் போவதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் தான் மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவிகிதம் என குறைக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்து இருக்கிறது. எனவே தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் அதற்கு மாற்றாக இனி தங்க நகைகளை நோக்கி திரும்புவார்கள் என எண்ணப்படுகிறது. அதுமட்டுமின்றி வரி உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படும் போது தங்க பத்திரங்களில் கிடைக்கக்கூடிய வருமானம் சற்றே குறையும்.
அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்ததில் இருந்தே தேசிய பங்குச்சந்தையில் எஸ்ஜிபிகளின் விலை 2.6 சதவீதம் என சரிவடைந்தது. அதாவது ஒரு யூனிட்டின் விலை என்பது 7275 ரூபாய் என ஆனது. எனவே தங்க பத்திரங்களுக்கான டிமாண்ட் குறைந்து விடும் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவில் முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தங்க பத்திரங்கள் வெளியீடு செய்யப்பட்டன அப்போது முதலீடு செய்தவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தங்களுடைய முதலீட்டை அன்றைய தேதிக்கான தங்கம் கிராமின் விலைக்கு ஏற்ப திரும்ப பெற்றுக் கொண்டனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications