டெல்லி: அண்மையில் தெற்கு டெல்லியில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடிய மூன்று பேரை காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தி கைது செய்தனர். இவர்களின் பெயர் விஷால் மேகி, அமித் மெஹரா மற்றும் விஜயகுமார் என்றும் மூவரும் பல விதமான ஏடிஎம் முறைகேட்டில் ஈடுபட்டு பணத்தை திருடி இருப்பதும் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த மூன்று பேரில் இருவர் ஏடிஎம் மையங்களுக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை மறைத்துவிட்டு இயந்திரங்களில் உள்ள கார்ட் ரீடரை நீக்கி விடுகின்றனர்.

பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது, அதில் கார்டு ரீடர் இல்லாமல் கார்டு சிக்கி கொள்ளும். அப்பொழுது இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர் போல உள்ளே வருவார். கார்டை வெளியில் எடுக்க உங்களுக்கு உதவுவது போல நடிப்பார்.
அப்போது கார்டை எடுக்க உங்களின் பின் நம்பரை உள்ளிட சொல்வார். ஆனால் அதற்கெல்லாம் கார்டு வெளியே வந்துவிடாது. ஆனால் உங்களின் பின் நம்பரை இவர்கள் அறிந்து வைத்து கொள்வர். நான் இங்கிருந்து கார்டை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கிக்கு சென்று புகார் அளித்து விட்டு வாருங்கள் என சொல்லி உங்களை அனுப்புவார்கள்.
நீங்கள் திரும்பி வருவதற்குள் உங்களது பின் எண்ணை பயன்படுத்தி ஏடிஎம் கார்டை கொண்டு உங்களது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகிறார்கள்.
இவ்வாறு இவர்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 25க்கும் அதிகமான இடங்களில் பணங்களை திருடியுள்ளனர் ஆன்லைன் மூலம் இத்தகைய மோசடிகளை கற்றுக் கொண்டதாக இவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து பல்வேறு டெபிட் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
உங்களது ஏடிஎம் கார்டு ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது எனில் எக்காரணத்தைக் கொண்டும் யார் வந்து கேட்டாலும் உங்களது பின் நம்பரையோ அல்லது மற்ற பிற ரகசிய தகவல்களையோ ஒருபோதும் வெளிடாதீர்கள் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏடிஎம் மையங்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாக உங்களுக்கு தோன்றினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஆள் நடமாட்டமில்லாத பகுதி, இரவு நேரங்கள், ஓரமாக உள்ள ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றுக்கு பணம் எடுக்க செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications