சென்னை: இந்தியாவில் சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உங்களின் சிம் கார்டு தடை செய்யப்படும், வங்கி கணக்கு எண் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டி லிங்க் அனுப்பி போன்களை ஹேக் செய்து வந்த மோசடியாளர்கள் இப்போது ரேசன் கார்டை தங்களின் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்கின்றன. இதில் ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும் மலிவான மற்றும் இலவசமான பொருட்களை சிலர் முறைகேடாக பெறுகின்றனர் என புகார் எழுந்தது. இதனை அடுத்து ரேசன் கார்டுகளில் கேஒய்சி (KYC (Know your customer))அப்டேட் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

கேஒய்சி அப்டேட் செய்யும் பணிகள் ரேசன் கடைகள் வாயிலாக மட்டுமே நடக்கின்றன, வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை செய்து முடித்தால் மட்டுமே ரேசன் கார்டு மூலம் மானிய விலையில் பொருட்கள் வாங்க முடியும்.
இந்த நிலையில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்களாம். தொலைபேசி வாயிலாக அழைத்தும், மெசேஜ் அனுப்பியும் உங்களின் ரேசன் கார்டுக்கு கேஒய்சி செய்யவில்லை என்றால் உடனே ரேசன் கார்டு ரத்தாகிவிடும் என கூறுகிறார்களாம்.
எதிரில் இருப்பவர்கள் உடனே இதனை கேட்டு அச்சமடைகிறார்களா என பார்க்கின்றனர். அச்சப்படுவதை அறிந்தால் கவலை வேண்டாம் நாங்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் போதும் கேஒய்சி அப்டேட் ஆகி விடும் என்கிறார்களாம்.அப்படி அவர்கள் அனுப்பும் மெசேஜில் உள்ள லிங்கை கிளில் செய்தால் உடனே அவர்களின் போனை ஹேக் செய்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கிறார்களாம்.
இதனிடையே ரேசன் கார்டுக்கான கேஒய்சி அந்தந்த கார்டுக்கு சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் மட்டுமே செய்யப்படுகிறது என்கின்றனர் இந்த துறையை சேர்ந்தவர்கள். ஆன்லைனில் கேஒய்சி அப்டேட் செய்யப்படுவதில்லை, தொலைபேசி வாயிலாகவும் செய்யப்படுவதில்லை அவ்வாறு யாராவது அழைப்பு விடுத்தாலோ , லிங்க் அனுப்பினாலோ அதனை நம்ப வேண்டாம் என கூறுகின்றனர். ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் எண் ,மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ரேசன் கடைகளில் நேரடியாக சமர்ப்பித்து கேஒய்சி செய்து கொள்ளலாம்.
ரேசன் கடைகளில் உங்களின் கைரேகை பதிவு செய்தாலே கூட போதுமாம். எனவே பொதுமக்கள் தங்களுடைய ரேசன் கடைக்கு நேரடியாக சென்று தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications