இந்தியாவில் சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதியவர்களை குறி வைத்து வாட்ஸ் அப் காலில் மிரட்டி பணம் பறிப்பது, செல்போனை ஊடுறுவும் ஸ்பேம் மெசேஜ்களை அனுப்புவது , ஓடிபி ஸ்கேம், அதிகாரிகளை போல போலியாக பேசி மோசடி செய்வது என கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் பணம் பறி போகிறது.
ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதமாக புதிய சிம் கார்டு வாங்கும் நடைமுறைகளை அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்படி ஒரு நபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 மொபைல் இணைப்புகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற புதிய விதியை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமல்படுத்தியுள்ளது. இந்த வரம்பை தாண்டியவர்கள் இனி புதிய சிம் கார்டுகளை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனிநபர் ஏற்கனவே தனது பெயரில் 9 மொபைல் இணைப்புகளை வைத்திருந்தால், அவருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது. இந்த விதி ஆகஸ்ட் 24 முதல் நடைமுறைக்கு வருகிறது. யாராவது 9க்கு மேல் சிம் கார்டு கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான மொபைல் இணைப்புகளை வைத்துள்ளீர்கள், எனவே புதிய இணைப்பு வழங்க முடியாது என்ற தகவல் தெரிவிக்கப்படும். அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் இந்த தகவலை அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதனை செயல்படுத்த டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம் (DIP) என்ற அமைப்பை தொலைத்தொடர்பு துறை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், ஒரு நபர் ஏற்கனவே எத்தனை சிம் கார்டுகளை வைத்துள்ளார் என்பதை கண்டறிய முடியும். ஆகஸ்ட் 23 முதல், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வரம்பை எட்டிய சந்தாதாரர்களின் புகைப்படங்கள் DIP தளத்தில் பதிவேற்றப்படும். இது டெலிகாம் நிறுவனங்கள் அந்தந்த வாடிக்கையாளர்களை எளிதில் அடையாளம் காண உதவும்.
அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்களை நவம்பர் 30, 2026க்குள் முழுமையாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 30-க்குள் இந்த புதிய நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, விதிகளை மீறி பெறப்பட்ட கூடுதல் இணைப்புகள் குறித்து தெளிவு ஏற்படும் வரை அவை உடனடியாக முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம், போலி சிம் கார்டுகள் பயன்பாட்டை குறைக்கவும், தொலைத்தொடர்பு மோசடிகளை தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையில் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது மோசடியாளர் புது புது சிம்கார்டுகளை வாங்கி மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்கும்.
அதே வேளையில் சாமானிய மக்களுக்கும் இது பொருந்தும். பலரும் அடிக்கடி மொபைல் எண்ணை மாற்றும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் இனி 9 சிம் கார்டுகளுக்கு மேல் பெறவே முடியாது. எனவே சிம் கார்டு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வேளை ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை என்றால் அதனை வேறு நிறுவனத்திற்கு போர்ட் செய்து கொள்ளலாம். அடிக்கடி சிம் கார்டை மாற்றுவது சிக்கலில் தான் முடியும்.


Click it and Unblock the Notifications

