சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னையில் தொடர்ச்சியாக நான்கு வர்த்தக நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
ஜனவரி 9ஆம் தேதியன்று ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 விலை உயர்ந்து 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. ஜனவரி 10ஆம் தேதி அன்று 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 12,900க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி 12ஆம் தேதி நேற்று தங்கத்தின் விலை தடாலடியாக கிராமுக்கு 220 ரூபாய் உயர்வு கண்டது. இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் நேற்று 13,120 ரூபாய்க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று 13,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை ஆகும் . சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 400 ரூபாய் விலை உயர்ந்து 1,05,000 ரூபாயை கடந்திருக்கிறது. இன்றைய தேதிக்கு ஒரு சவரன் தங்கம் 1,05,360 ரூபாயாக இருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,368 ரூபாய் என்றும் ஒரு சவரன் 1,14,944 ரூபாய் என்றும் ஏறி இருக்கிறது. ஒரு கிராம் கிட்டதட்ட 15,000 ரூபாயை நெருங்கி வருகிறது. 18 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 10,980 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் தான் இப்படி விலை உயர்கிறது என பார்த்தால் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாயும் கிலோவுக்கு 5,000 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 292 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2, 92,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை கிராமுக்கு 24 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 24,000 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
தங்கத்தை பொறுத்தவரை இந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் கிராமுக்கு 420 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 3,360 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,440 ரூபாய்க்கு விற்பனையானது கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரையிலான இந்த 13 நாட்களில் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 730 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரன் விலை 5840 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
உலக அரசியல் சூழல்களே தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் ஆகும். வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கணிப்பு, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% என்ற டிரம்பின் அறிவிப்பு உள்ளிட்டவை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி முதலீடுகளை திருப்பி விடுகின்றனர். இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications