இந்தியாவில் நியூ ஏஜ் டெக்னாலஜி நிறுவனங்கள் ஒருபக்கம் வேகமாக வளர்ந்தாலும், ஒரு புறம் பல பிரபலமான நிறுவனங்களும் தோல்வி அடைந்து வருவது பலரையும் பயமுறுத்துகிறது. இப்படி வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் நிறுவனம் தான் Dunzo, எந்த அளவுக்கு Dunzo மோசமான நிலையில் இருக்கிறது என்றால் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் டன்சோ நிறுவனத்தின் எதிர்காலம் அதன் மிகப்பெரிய முதலீட்டாளரான ரிலையன்ஸ் ரீடைல் கையில் உள்ளது என்பது தான் இப்போதைய நிலை. டன்சோ நிறுவனம் நிதியைத் திரட்ட உரிமைகள் வெளியிட முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.

டன்சோ நிறுவனத்திற்கு அவசரமாக நிதி தேவைப்படும் நிலையில் அதன் முக்கியமான நிர்வாக ஊழியர்களுக்குக் கூட சம்பளம் வழங்க முடியாமல் திணறி வரும் இந்த வேளையில் ரிலையன்ஸ் ரீடைல்-ன் தாமதம் கூடுதலான பாதிப்பை உருவாக்கி வருகிறது.
டன்சோ நிர்வாகம் முதலீட்டாளர்களிடம் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த முட்டுக்கட்டை, விரைவில் புதிய முதலீடு கிடைக்காத நிலையில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பங்கு உரிமைகளை வெளியிட்டு முதலீட்டைத் திரட்ட டன்சோ சிஇஓ கபீர் பிஸ்வாஸ் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார்.
டன்சோ நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் வைத்துள்ளது, இதனால் பெரும் முதலீட்டாளராக இருப்பது மட்டும் அல்லாமல் புதிய முதலீட்டைத் திரட்டும் பணியில் அதிகப்படியான அதிகாரத்தையும் கொண்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் முதலீட்டு திரட்டலுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் டன்சோ நிர்வாகம் மாற்று நிதி ஆதாரத்திற்கும் முயற்சிகளை ஏற்கனவே துவங்கியுள்ளது. ஆனால் அதுவரையில் தாக்குப்பிடிக்குமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல், கூகுள், லைட்பாக்ஸ், லைட்ராக், ப்ளூம் வென்சர்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள டன்சோ நிறுவனம் ஜனவரி 2022ல் 800 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட நிலையில், 2023 அக்டோபர் மாதம் வெறும் 200 மில்லியன் டாலர் மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.


Click it and Unblock the Notifications