உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி பெருகிவரும் அதே வேளையில் அதைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். அத்தகைய ஒரு பெரிய மோசடியை அமலாக்க இயக்குனரகம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மோசடியின் மதிப்பை கேட்டால் தலையே சுற்றும். ஆம் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் பல முக்கிய நபர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடி ஒரு பொன்சி திட்டமாக நடத்தப்பட்டு, முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது அமலாக்க இயக்குனரகம் இந்த மோசடியை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த மோசடியின் முக்கிய குற்றவாளி சதீஷ் கும்பானி. இவர் அமெரிக்காவில் இதே குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். முதலீடு செய்பவர்களிடமிருந்து பணத்தை மோசடியாக பெற்று, எங்கிருந்து பணம் வந்தது என்பது யாருக்குமே தெரியாதது போல் மறைத்துள்ளார்.
சதீஷ் கும்பானி ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பெற்று கிரிப்டோ வாலெட்டுகள் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மூலம் மாற்றி மறைத்து வைத்துள்ளார். இந்த மோசடியில் தொடர்புடைய ரூ. 1,646 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.
சதீஷ் அகமதாபாத்தை சேர்ந்தவர். இவர் பிட்கனெக்ட் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உலகமுழுவதும் தனது ஏஜெண்டுகளை வைத்து இந்து திட்டத்தை பரப்பியுள்ளார். மேலும் அந்த ஏஜெண்ட்களுக்கெல்லாம் மக்கள் முதலீடு செய்வதை பொறுத்து கமிஷனும் வழங்கியுள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உண்மையாக கிரிப்டோ முதலீடுகளை செய்யத் தூண்டுவதற்கு, நிறுவனம் உண்மையானது போல காட்டிக் கொள்வதற்கும், இவருடன் இணைந்து இந்த மோசடியில் செயல்பட்ட இணை குற்றவாளியான திவ்யேஷ் பிட்கனெக்ட் ட்ரைனிங் இன்ஸ்டியூட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளார். இதில் முதலீட்டாளர்களுக்கு பிட்காயின் பற்றிய தகவல்களையும் வழங்கத் தொடங்கினர்.
இந்தியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்த திவ்யேஷ், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பிட்கனெக்ட் நாணயத்தை விளம்பரப்படுத்தியுள்ளார். விசாரணையில், ஷைலேஷ் பாபுலால் பட் என்ற மற்றொரு நபரின் தொடர்பும் தெரியவந்தது, அவர் ஆகஸ்ட் 2024 இல் ED யால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் சதீஷ் குற்றம் சாட்டப்பட்டார். இவர் பிட்கனெக்ட் என்ற திட்டத்திற்காக ஒரு சிறப்பு சாப்ட்வேரை உருவாக்கிய கிரிப்டோ சந்தையில் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று மக்களை நம்ப வைத்தார். ஆனால் உண்மையில் இது ஒரு மோசடி என்று தெரியாமல் மக்களும் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுத்து லாபம் காட்டுவது போல நடித்துள்ளார்.
பொன்சி திட்டத்தின் யுக்தியே இதுதான். புதிய முதலீட்டாளர்களின் பணத்தை வைத்து பழைய முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுப்பது போல காண்பித்து அதன் பின்னர் அனைவரின் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடுவது தான் இந்த திட்டம்.
ஏற்கனவே டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, ஜாப் மோசடி, ஆன்லைன் மோசடி என எக்கச்சக்க மோசடிகள் மூலம் மக்கள் பணத்தை இழந்து வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதானாலும் ஒன்றுக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். அதிக லாபத்தை குறுகிய காலத்தில் தருவதாக கூறும் எந்த ஒரு திட்டமும் பெரும்பாலும் உண்மையானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கும் மேலாக முதலீடு செய்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் அரசாங்கத் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம். இது போன்ற மோசடிகளை தவிர்க்க விழிப்புணர்வு மட்டுமே உதவும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications