மும்பை: ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடிகளில் சிக்கி பல ஆயிரம் ரூபாய் தொகையை இழந்த கதைகளைக் கேட்டிருப்போம். அதற்கு உதாரணமாக மற்றும் ஒரு சம்பவம் மும்பையை சேர்ந்த முதியவருக்கு நடந்துள்ளது. இதனால் அந்த முதியவர் சுமார் ரூ. 2.6 கோடி ரூபாயை இழந்துள்ளார். முதலீட்டு குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் செயல்பட்ட வாட்ஸ் அப் குழுவில் இவர் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். பணத்தை முதலீடு செய்வதற்கான உதவி குறிப்புகளையும் யோசனைகளையும் கூறும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இவர் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தக மோசடியில் ரூ. 2.6 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வாட்ஸ் அப் குரூப்பில் இருந்த ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியால் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறி இந்த முதியவரை ஏமாற்றியுள்ளார். மேலும் நீங்கள் என்னிடம் பணத்தை கொடுத்தால் நான் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை உங்களிடம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அவரின் மீது இருந்த நம்பிக்கையில்,முதியவர் அந்த நபருடைய பேங்க் அக்கவுண்ட்டிற்கு ரூ. 50,000 ரூபாயை அனுப்பியுள்ளார். தற்போது கொள்ளையடிப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் யுக்தி என்றால் முதலீட்டிற்கு என்று ஒரு ஆப்பை உருவாக்குவது அல்லது ஒரு இணையதளத்தை பயன்படுத்துவது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கணக்கை தொடங்கி பணம் அதிகம் சம்பாதித்தது போல காண்பிப்பது.
அதே ட்ரிக்கைப் பயன்படுத்தி அந்த முதியவருக்கு லாபம் பெற்றது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த முதியவர், தொடர்ந்து அந்த நபர் மீது பெரும் நம்பிக்கை கொண்டு ரூ. 2.6 கோடி ரூபாயை அந்த நபரின் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார்.
அதன்பின் அந்த முதியவரிடம், வெளிநாட்டு நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதனால் முதலீட்டில் 20 சதவீதம் தேவை என்றும் கூறினார். அந்த முதியவர் அந்த 20 சதவீதம் போக மீதி பணத்தை கேட்டுள்ளார். அந்த நபரும் தருகிறேன் என்று கூறி தலைமறைவாகியுள்ளார். இதனை பற்றி தெரிந்த அந்த முதியவர் போலீசாரிடம் புகார் அளித்தார். ஐபிசி சட்டத்தின் கீழ் அடையாள திருட்டு ஆகியவற்றிற்காக, மோசடி செய்த அந்த நபரின் மீது Fir பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற மோசடிகளில் இருந்து எவ்வாறு கவனமாக இருப்பது?: முதலில் யார் என்று தெரியாத நபர்களை நம்பி பணத்தை முதலீடு செய்யக் கூடாது. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தைப் பற்றிய முழு தகவல்களை பெற வேண்டும். முதன்முறையாக முதலீடு செய்யும் பொழுது சிறிய தொகையை வைத்து முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு லாபம் கைக்கு வந்தால் அதிக தொகையை முதலீடு செய்யலாம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யக்கூடாது. மற்றவர்களிடம் பணம் கொடுத்து முதலீடு செய்வதை விட முடிந்தவரை நீங்களே நேரடியாக முதலீடு செய்வது நல்லது. அவ்வாறு முதலீடு செய்வதற்கு, பங்கு சந்தை நிலவரத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications