இன்று இருப்பது போல் நாளை இருக்காது, நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பது நிசர்னமான உண்மை. இதனை ஐ.டி. பணியாளர்களின் தற்போதைய நிலையை வைத்தே அறிந்து கொள்ளலாம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை, ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களில் பலர் நல்ல சம்பளம் மற்றும் சலுகை கிடைக்கும் என்றால் வேறு நிறுவனத்துக்கு டக்கென்று மாறி விடுவார்கள்.
இதனால் ஒவ்வொரு நிறுவனத்தின் மனிதவள நிர்வாகிகளுக்கு (எச்.ஆர்.) வேலைக்கு ஆட்களை எடுப்பது அல்லது தக்கவைப்பது பெரிய வேதனை அல்லது கெட்ட கனவாகவே இருந்தது.

கொரோனா பரவல் காலத்தில் தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்தது. இதனால் ஐ.டி. நிறுவனம் அதிகளவில் ஆட்சேர்ப்பு நடத்தினர். கடந்த 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் டாப் 4 ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சேர்க்கை சுமார் 3 மடங்கு அதிகரித்து 2.4 லட்சம் பணியாளர்களாக உயர்ந்தது.
முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனங்கள் 90,813 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்து இருந்தன. 2021-22ம் நிதியாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் மட்டுமே 1 லட்சம் பேரை வேலைக்கு எடுத்தது.
அந்த காலகட்டத்தில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்லும் விகிதம் அதிகமாக இருந்தது. இதனால் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஐ.டி. நிறுவனங்கள் முடிந்த அளவுக்கு எவ்வளவு பணியாளர்களை வேலைக்கு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்தனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஒராண்டில், உலக பொருளாதார மந்தநிலை, உக்ரைன் போர் போன்ற பிரச்சினைகளால் ஐ.டி.க்கான தேவை சரிந்தது. இது ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தை பாதித்தது. இதனையடுத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், பணியாளர்களின் தலையில் நிறுவனங்கள் கை வைத்தன.
கணிசமான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கின. சமீபத்திய சில காலாண்டுகளில் சில நிறுவனங்களில் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், புதிய பணியமர்த்தல் நிறுவனத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு ஈடான எண்ணிக்கையில் இல்லை. மேலும் சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த பணியாளர்களை எடுப்பதை ஐ.டி. நிறுவனம் தாமதம் செய்து வருகின்றன. ஐ.டி. துறையில் இப்போது வேலை கிடைப்பது கொஞ்சம் கடினமாக விஷயமாக மாறிவிட்டது.
இதனால் எதார்த்த நிலையை உணர்ந்த ஐ.டி. பணியாளர்கள் இருக்கிற வேலை போய் விட கூடாது என்று எண்ணத்தில் தற்போது பார்க்கும் வேலையை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளனர். வேறு நிறுவனத்துக்கு மாறுவோம் என்ற ஆசையை எல்லாம் பரண் மேல் தூக்கி போட்டு விட்டனர் இருக்கிற வேலையை காப்பாற்றி கொள்வோம் என்ற மனநிலையில் ஐ.டி. பணியாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக நிறுவனங்களில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் குறைந்துள்ளது. இந்த மாற்றம் கடந்த ஒராண்டில்தான் நடந்துள்ளது.
ஐ.டி. நிறுவனங்களின் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் குறைந்திருப்பது குறித்து வளர்ச்சி ஆலோசனை நிறுவனமான கேடலின்க்ஸின் பார்ட்னர் ராம்குமார் ராமமூர்த்தி கூறுகையில், தொழில்துறை வளர்ச்சியான வேகமாக குறைந்து வருவதால், பணியாளர்கள் வெளியேறும் விகிதமும் கடுமையாக குறைந்து வருகிறது.
ஐ.டி. துறை வளர்ச்சியின் உச்சகட்டத்தில் இருக்கும் போது, சில ஐ.டி. நிறுவனங்கள் தொடர்ச்சியாக எட்டு காலாண்டுகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை வருடாந்திர பணியாளர்கள் வெளியேறுவதை கண்டன. அதாவது 40 முதல் 50 சதவீத பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
இதனையடுத்து அவர்கள் இடத்தை நிரப்ப எடுத்தப்பட்ட பணியாளர்கள், பணியில் சேர்ந்த ஒரிரு வருடங்களுக்குள் நிறுவனத்தை வெளியேற விரும்பாததால், பணியாளர்கள் வேலையை விட்டு செல்லும் விகிதம் குறைவதற்கு வழிவகுக்கிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications