இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஓய்வுகால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎஃப்ஓ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளரின் சம்பளத்திலும் நிறுவனம் சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎஃப் கணக்கில் மாதம் தோறும் வரவு வைக்கப்படுகிறது. நாம் வேலை முடிந்து பணி ஓய்வு பெறும் போது இந்த பிஎஃப் பணம் பெரிய சொத்தாக வளர்ந்து நிற்கும். ஏனெனில் அரசு பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டியும் தருகிறது. இது காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைவதால் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் தரும்.

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் இறுதித் தொகையை திரும்ப பெறுவதற்கான நடைமுறையை விரைவில் தானியங்கி முறைக்கு மாற்ற இருக்கிறார்களாம். அதாவது Auto Settlement முறைக்கு மாற்ற உள்ளனர். எனவே பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் இறுதித் தொகையை எடுப்பதற்காக விண்ணப்பம் செய்யும்போது எந்த வித தாமதமும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக பணம் சென்றடையும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரையில் பகுதி அளவு தொகை எடுக்க மட்டுமே ஆட்டோ செட்டில்மெண்ட் எனப்படும் தானியங்கி முறை செயல்பாட்டில் இருக்கிறது. இதன்படி இந்த ஆட்டோ செட்டில்மெண்ட் பிரிவின் கீழ் நாம் விண்ணப்பம் செய்யும்போது மூன்று நாட்களுக்குள் நாம் விண்ணப்பம் செய்த தொகையானது நம் அக்கவுண்டிற்கு வந்துவிடுகிறது. இந்த வேகமான வசதியை இனி பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தை பெரும் இறுதி தீர்வு முறைக்கும் விரிவுபடுத்த இபிஎஃப்ஓ திட்டமிட்டு இருக்கிறது என அவர் கூறுகிறார்.
அதேபோல பணியாளர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பழைய பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை புதிய கணக்குக்கு மாற்ற இனி தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய தேவை இல்லை. பழைய கணக்கில் இருக்கும் தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாற்றப்படும் வசதியும் அறிமுகமாக இருக்கிறதாம். மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் இபிஎஃப்ஓ தொடர்பான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
எனவே விரைவில் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய இறுதித் தொகையை ஓய்வு காலத்தின் போது அல்லது அதற்கு முன்னரே கூட நான் இனி வேலைக்கு செல்ல போவதில்லை எனவே இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்கிறேன் என்பன போன்ற சூழல்களில் அதற்காக விண்ணப்பம் செய்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவை இனி இருக்காது. ஆட்டோ செட்டில்மெண்ட் முறையில் இந்த பணம் உங்களுடைய கணத்திற்கு விரைவில் வரவு வைக்கப்பட இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை அவசர தேவைகளுக்கு எடுத்து பயன்படுத்த ஏதுவாக யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்துவது மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எடுத்து பயன்படுத்துவது தொடர்பான வசதிகள் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் மூலம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications

