புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அப்போது இருந்த போலி நோட்டுகள் அனைத்தும் கண்டறியப்பட்டது. தற்போது கள்ள நோட்டுகள் மீண்டும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வந்து கொண்டிருக்கிறது. குஜராத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு வியாபாரியை ஏமாற்றுவதற்காக மகாத்மா காந்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் முகத்தைக் கொண்ட போலியான 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி இரண்டு பேர் அதிர்ச்சியூட்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த போலி ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்குப் பதிலாக நடிகர் அனுபம் கெர் முகம் அச்சிடப்பட்டிருந்தது. போலி நோட்டுகளில் அனுபம் கெரின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" என்பதற்கு பதிலாக "ரிசோல் பேங்க் ஆஃப் இந்தியா" என்று அச்சிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெஹுல் தக்கர் என்ற வர்த்தகர் தனது பணியாளரான பாரத் ஜோஷியை வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2 நபர்களுக்கு ரூ.1.6 கோடி மதிப்புள்ள 2,100 கிராம் தங்கத்தை வழங்குவதற்காக அனுப்பியுள்ளார். அப்போதுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தனக்கு நம்பகமான உறவைக் கொண்டிருந்த நகைக்கடை மேலாளர் பிரசாந்த் படேலின் அழைப்பைப் பெற்ற பிறகு மெஹுல் தக்கர் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
RTGS வழியாக முழுத் தொகையையும் உடனடியாக மாற்ற முடியாது என்று படேல்.. மெஹுல் தக்கரிடம் தெரிவித்தார். இதனால் ரூ.1.3 கோடியை ரொக்கமாக வழங்கினார்.
ஜோஷி நவரங்புராவில் உள்ள அவர்களின் தற்காலிக அலுவலகத்தில் தங்கத்தை வழங்கியுள்ளார். 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 26 கட்டுகளை அந்த நபர்கள் ஜோஷியிடம் கொடுத்துவிட்டு இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை எண்ணும்படி அறிவுறுத்தினர். மீதமுள்ள ரூ.30 லட்சத்தை எடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டு அந்த 2 நபர்களும் சென்றுள்ளனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோஷி கள்ள நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்திற்குப் பதிலாக அனுபம் கெரின் உருவம் இருந்ததைக் கண்டுபிடித்தார்.
ஜோஷி இந்த மோசடியை உணர்ந்த நேரத்தில், அந்த நபர்கள் தங்கத்துடன் தப்பி ஓடிவிட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து, தக்கர் செப்டம்பர் 24 அன்று நவரங்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் உடனடியாக விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பரிவர்த்தனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றவாளிகள் அலுவலகத்தை அமைத்துள்ளனர். பாலிவுட் நடிகரின் படத்தை துணிச்சலாகப் பயன்படுத்தி வினோதமான முறையில் இந்த மோசடி நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications