இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருக்கும் விவசாயிகள் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி - பஞ்சாப் பகுதிகளில் விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் மூலம் வட இந்தியாவில் இருந்து மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கு வரும் சரக்குகள் மற்றும் மூலப்பொருட்களின் போக்குவரத்துக்குப் பல நாட்களாகப் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் தாக்கத்தின் மூலம் சப்ளை செயின் பாதிப்புகள் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் அடுத்த ஒரு வாரம் இந்தப் போராட்டம் தொடர்ந்தால் கோதுமை, பருத்தி, அரிசி, சோளம், கரும்பு, கடலை முதல் பல பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் மாபெரும் போராட்டம் சப்ளை செயினைப் பாதிப்பதைத் தொடர்ந்து, நாட்டின் வர்த்தகப் போக்கையும் பாதிக்கலாம். குறிப்பாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கலாம்.
ஸ்கிராப் பொருட்கள் முதல் தொழிற்சாலைகள் இயங்குவதற்கான முக்கியப் பொருட்களான இரும்பு மற்றும் எஃகு போன்ற மூலப்பொருட்களின் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. டெல்லி- பஞ்சாப் சுற்றி சுமார் 4000 கடைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 5-6 நாட்களாக, ஏராளமான விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) சட்டரீதியான உத்தரவாதம். டெல்லி காவல்துறை ஒரு மாதமாகத் தேசிய தலைநகர் முழுவதும் 144 தடை விதித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானா மற்றும் பஞ்சாம் மாநிலத்தில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாகப் பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பால் டீசல் விநியோகத்தில் 50 சதவீதமும், எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதமும் பாதிக்கப்பட உள்ளது.
இதேவேளையில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் அமைப்பு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை பாரத் பந்த் அதாவது நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
காலை 6 மணிக்குத் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நாட்டின் பல இடங்களில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வெகு சில பகுதிகளில் மட்டுமே மக்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பந்த் காரணமாக எந்தப் பாதிப்பும் இல்லை. கர்நாடகாவில் ஒரு பகுதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் மாலை 4 மணி வரை கிராமப்புறங்கள் மற்றும் கிராமங்களை ஒட்டிய பகுதிகளிலும் அனைத்து நடவடிக்கைகளை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications