அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் இதையே பின்பற்ற போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் நிலவும் தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகளை கட்டுப்படுத்த, ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவது இதுவே முதல்முறையாகும். பணவீக்கத்தை அதன் இலக்கான 2 சதவீதத்திற்கு கொண்டுவர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த வட்டி உயர்வை இந்திய ரிசர்வ் வங்கியும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து இலக்கினை தாண்டி உயர்ந்து வருவதால், வரும் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி கொள்கைகளை தான் பெரும்பாலான நாடுகளும் பின்பற்றும் என்பதாலும் ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. சர்க்கரை, வெங்காயம், பால் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைகளே உயர்ந்துள்ளன. எனவே நெருக்கடியை சமாளிக்க வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்புள்ளதாக் அண்மையில் கூட எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் உடனே வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டியை உயர்த்திவிடும். எனவே நம் ஈஎம்ஐ தொகை உயர்ந்துவிடும். இதில் ஒரு நன்மையும் இருக்கிறது இவ்வாறு ரெப்போ வட்டி உயர்ந்தால் நம் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டியும் உயரும்.
இதனால், புதிதாக ஃபிக்சட் டெபாசிட் செய்பவர்கள் கூடுதல் லாபமும் வட்டியும் ஈட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.ஆனால் Floating Rate முறையில் ஹோம் லோன் அல்லது இதர கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் மாத தவணை அதிகரிக்கக்கூடும். இது கடன் வாங்கிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் 1%க்கு மேல் ரெப்போ வட்டியை குறைத்தது. இந்த ஆண்டில் இதுவரை ரெப்போ வட்டியை மாற்றவில்லை. தற்போது 5.25%ஆக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடக்கிறது.


Click it and Unblock the Notifications


